ஒரு மண்ணையும் அதன் மைந்தர்களையும் இப்படி ரத்தமும் சதையுமாக தமிழ் சினிமாவில் பார்த்து எவ்வளவோ காலமாகிறது.அந்த ஏக்கத்துக்கு பதிலாக வந்து சேர்ந்துருக்கிறது வெற்றி மாறன், தனுஷ் கூட்டணியின் ‘அசுரன்’.’போய்ப் புள்ள குட்டிகள நல்லாப் படிக்கவைங்கய்யா’என்ற ஒற்றை வரிக்கதைதான்.ஆனால்...

பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என்று ஆங்கிலத்திலும், மூலக்கதை என்று தமிழிலும் போடுகிறார்கள். ஆனால் கத, கிளைமேக்ஸ் தவிர்த்து அப்படியே வெக்கை நாவல்தான்.

கதைக்குப் போவோம். சிவசாமி [தனுஷ்]தனது தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல கொலைகளைச் செய்து தண்டனை பெற்று  அடுத்த கட்ட வாழ்க்கைக்குத் திரும்புகிறார். புதிய வாழ்க்கையும் அப்படி சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 3 ஏக்கர் நிலத்தை எழுதித்தராத ஒரு பகைக்காக அவரது மூத்த மகன் அநியாயமாகக் கொல்லப்பட, அண்ணன் கொலைக்காக பண்ணையாரை தம்பி[கென்] போட்டுத் தள்ளுகிறார். பதிலுக்கு சிவசாமியின் குடும்பத்தையே போட்டுத்தள்ள பண்ணையார் வகையறா கொலைவெறியோடு அலைய தனது குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள காட்டுக்குள் பதுங்கும் அவர் நீதிமன்றத்தில் சரணடைய நினைக்கிறார். அது அவ்வளவு சுலபமல்ல... என்று போகிறது கதை.

வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் முதலில் திருஷ்டி சுற்றிப்போட வேண்டும். கெமிஸ்ட்ரி என்பது நடிகர், நடிகைக்கு மத்தியில்தான் இருக்கவேண்டுமா என்ன? தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் இடையில் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிக்கொண்டே இருக்கிறது. அவர்களது மற்ற படங்களின் உச்சம் என்றே இப்படத்தைச் சொல்லவேண்டும். குறிப்பாக நடப்பு கதையில் தாடியும் மீசையுமாக வரும் தனுஷின் தோற்றத்தில் எனக்கு பல இடங்களில் வெற்றிமாறன் தான் வாழ்ந்துகொண்டிருந்தார். குறிப்பாக கடைசி சீனில் ‘நம்ம கிட்ட இருக்கிற பணத்தையும் நிலத்தையும் அவங்க புடுங்கிக்கலாம். ஆனா நம்மளோட படிப்பை?என்று தனுஷ் பேசும்போது.

வடசென்னைக்கு தேசிய விருது தவறியபோது வருத்தப்பட்டோம். அசுரனுக்கு அது நடக்காமல் டெல்லி வரை தேடி வருவோம் என்று அடித்துச் சொல்லக்கூடிய படப்பு இது.

தனுஷின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர். தெக்கத்திப் பெண்ணாகவே மாறி சீறுகிறார். ‘என் பிள்ளைக்குப் பதிலா உங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் அவனைக் கொன்னு போட்டிருந்தா இந்த ஊருக்கே கெடா வெட்டி சோறு போட்டிருப்பேன்’என்கிற தெனாவட்டு, அடுத்த மகனும் பறிபோய்விடுவானோ என்கிற பதைபதைப்பு அபாரம். சேச்சியை கேரளாப் பக்கம் போக விடாம கெட்டியா புடிச்சிக்கங்கப்பா.

தனுஷின் இளைய மகனாக, அண்ணனின் கொலைக்குப் பழிவாங்குகிற ஆக்ரோஷத் தம்பியாக வரும் கென் கருணாஸை ஒரு குட்டி தனுஷ் என்றுதான் சொல்லவேண்டும். சின்னப்பயல் புகுந்து விளையாடுகிறான்.இன்னும் பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல்,ஆடுகளம் நரேன்,பவன்,இயக்குநர் வெங்கடேஷ், இயக்குநர் சுப்ரமணிய சிவா என்று அத்தனையும் முத்திரை பதிக்கும் நடிப்பு.

வேல்ராஜின் ஒளிப்பதிவுக்கு ஒரு வெல்டன். கோவில்பட்டி வட்டார காட்டுப்பகுதிக்குள் உட்கார்ந்து கதையைக் கேட்கிற அனுபவத்தைத் தருகிறது அவரது ஒளிப்பதிவு. கதையைத் தொந்தரவு செய்யாத குட்டி குட்டி பாடல்களுடன் பின்னணி இசைக்கும் மற்ற படங்களை விர சற்று அதிகமாகவே மெனக்கெட்டிருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்குமார்.

படத்தில் குறைகளே இல்லையா? ஃப்ளாஷ்பேக் கொஞ்சம் நெளிய வைக்கிறது. க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியில் இளைய மகனைக் காப்பாற்றுவதற்காக அத்தனை அடியாட்களுடன் தனுஷ் மோதும் வீரசாகசக் காட்சியை கண்டிப்பாகத் தவிர்த்திருக்கலாம்.

மற்றபடி,...வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியின் ‘பொல்லாதவன்’,’ஆடுகளம்’,’வடசென்னை’படங்களுக்கு அடுத்த, வெறுமனே அடுத்த அல்ல, அடுத்த லெவல் படம் இந்த ‘அசுரன்’. அடுத்தவர் கதையைத் திருடி பஞ்சாயத்தில் அவமானப்படுவது, கொரியன் பட டிவிடிக்களை சுட்டு, குட்டு உடைந்தபின் தலையில் முக்காடு போட்டு அலைவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக இப்படத்தைப் பார்த்து திருந்தவேண்டும். ஏனெனில் தமிழில் ‘அசுரனாக’ மாறியிருக்கும் வெக்கை அளவுக்கு சிறப்பான, அதையும் விட வீரியமான கதைக் களங்கள் கொண்ட பல நூறு நாவல்கள் இருக்கின்றன.