தேர்தல் ஜூரம் தேசத்தையே தெறிக்க விடுகையில் தமிழகம் மட்டும் என்ன ச்சும்மாவா? எந்த கூட்டணி, எந்த தொகுதி, யார் வேட்பாளர், யாருக்கு வாய்ப்பு, எத்தனை கோடி, எவ்வளவு பட்டுவாடா, யாரை கவுக்கணும், யாரை ஏத்தணும்? என்று இன்ச் பை இன்ச் அரசியல் அல்லு அடிச்சு தூக்கிக் கொண்டிருக்கிறது. இந்த டெம்போவுக்கு நிகராக வெயிலும் வெளுத்துக் கட்டிக் கொண்டு இருக்கிறது. எங்கு திரும்பினாலும் பாலிடிக்ஸ் செய்திகள் போட்டுப் பொளக்கும் நிலையில் ஜில்லுன்னு நாலு சினிமா ஸ்பெஷல் பிட்ஸ், கண்ணுக்கும், மூளைக்கும் இதமாக இதோ...

* ஓவியா....’ஓஹோவியா!’வாக நடித்திருக்கும் ‘90ml’ படத்துக்கு இளசுகளிடம் கிடைத்திருக்கும் வரவேற்பினால் செம்ம வசூல். விளைவு, அதே டீம் சீசன் -2 வுக்கு தயாராகிவிட்டதாம். டைட்டிலை அப்படியே டபுளாக்கி ‘180 ml’ எனும் பெயரில் செகண்ட் பார்ட்டை எடுக்கிறார்கள். டைட்டில் டபுள் என்றால், உள்ளே சரக்கும், சல்லாபங்களும் டபுளாகத்தானே இருக்கும்! என்று இப்போதே எதிர்பார்ப்பு எகிறிப்போய் கிடக்கிறது இளசு ஏரியாவில். 

* காக்கா முட்டை! எனும் ஆகச்சிறந்த படத்தை தந்த இயக்குநர் மணிகண்டன்...’கடைசி விவசாயி’ எனும் பெயரில் விவசாய அழிவை மையப்படுத்தி ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை மையமாக வைத்து ரெண்டு ஸ்பெஷல் ஸ்கூப்ஸ்...

1. இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்தால் தான் நடிப்பதாக ஆசைப்பட்டு சொல்லியிருந்தாராம் ரஜினி. 
2. இந்தப் படத்தில் வேண்டி விரும்பி சிறு ரோலில் தானாக முன்வந்து நடிக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இதே மணிகண்டன் ‘ஆண்டவன் கட்டளை’ எனும்  வெற்றிப்படத்தை தனக்கு கொடுத்ததற்கான நன்றி இதுவாம். 

* ’வாலு! வேட்டை மன்னன்’ படப் பொழுதுகளில் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கு லவ்வு துளிர்த்து பீக் போனது. ஆனால் திடீரென பெரிய பட்ஜெகளில் பிஸியான ஹன்ஸி நைஸாக சிம்புவை கழற்றிவிட்டார். இப்போது ஹன்ஸ் மார்க்கெட் அநியாயத்துக்கு சரிந்துவிட்ட நிலையில் மீண்டும் விருப்பப்பட்டு போய் சிம்புவின் நட்பை புதுப்பிக்க முயல்கிறாராம். விரல் என்ன வித்தை காட்டப்போவுதோ தெரியலை. 

* அஜித்தும், அவரது புதிய பட இயக்குநருக்கும் சுத்தமாக கெமிஸ்ட்ரி செட் ஆகவில்லை. இந்த இடைவெளி சீனுக்கு சீன் பெரிதாகிக் கொண்டே போகிறதாம். ‘நேர் கொண்ட பார்வை’ என்று இந்தப் படத்துக்கு வைக்கப்பட்ட பெயரில் இருவரில் யாருக்கோ விருப்பமில்லையாம், தயாரிப்பு தரப்பே சம்பந்தப்பட்ட நபரின் பெயரை குறிப்பிடாமல் இதை சொல்லி வருத்தப்பட்டுள்ளது. டைட்டில் பிடிக்காதது தலைக்கா இல்ல டைரக்டர் விநோத்துக்கா? என்பதுதான் இண்டஸ்ட்ரியை கலக்கும் புதிர். 

* இந்தியன் -2 கிட்டத்தட்ட டிராப் பொசிஸனுக்குப் போய்விட்டதாக பேசப்படுவதில் இயக்குநர் ஷங்கர் பெரியளவில் காயப்பட்டிருக்கிறாராம். அவரால் மறுக்கவும் முடியவில்லை, படத்தை துவக்கவும் முடியவில்லை! அவரது தயாரிப்பில் பல நாட்களாய் விழுந்து எழுந்து உருவாகும் ‘இம்சை அரசன்’ பார்ட் - 2வும் இப்படி சிக்கலில் சிக்கியதும் சேர்ந்து கடுப்பாக்குகிறதாம் மனிதரை. 

* தனுஷின் மோஸ்ட் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான துரை செந்தில்குமார் இயக்கத்தில், சத்தியஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு பூஜை போட்டாச்சு. இந்தப் படத்தில்  அந்த ‘புன்னகை’ நடிகையும் கேரக்டர் ரோலில் கமிட் ஆகியிருக்கிறார். இந்நிலையில், அவரது கணவருக்கு போன் போட்ட சிலர், ‘உங்க மனைவி நடிக்கிறதுக்கு வேற ஹீரோ படமே கிடைக்கலையா? தனுஷ் கூட ஷுட் போறது குடும்பத்துக்கு சிக்கல்!  இண்டஸ்ட்ரிடே பார்த்து பொறாமை பட்ட உங்க ஜோடிக்கு ஏன் இந்த ரிஸ்க்?’ என்று கொளுத்திப் போட்டுள்ளார்களாம்.