துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள தனுஷ் - செல்வராகவன் கூட்டணி, தற்போது ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தனி மவுசு என்றே சொல்லலாம். இயக்குனர் செல்வராகவன், தனுஷ், கூட்டணி என்றாலே பலருக்கும் எதிர்பார்ப்புகள் எகிறிவிடும், இவர்களுடன் யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார் என்றால் திரையில் பட்டையைக் கிளப்பும் ட்ரீட் கன்பார்ம் என்பது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். 

இவர்கள் மூவரும் இணைந்து இதுவரை துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களில் பணியாற்றி உள்ளனர். தற்போது அந்த கூட்டணி மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் தற்போது ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு புவனா சுந்தர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, நானே வருவேன் படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதை படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது. தனுஷின் இரண்டு வேடங்களின் லுக் அடங்கிய போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஒரு லுக்கில் நடிகர் தனுஷ் கிளீன் சேவ் செய்து இளமையாக இருக்கிறார். மற்றொரு லுக்கில் தாடி வைத்து கண்ணாடி அணிந்தபடி இருக்கிறார். இதன்மூலம் செல்வராகவன் இயக்கத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.