தனுஷ் - வெற்றிமான் கூட்டணியில் வெளியாகி திரையுலகையே அதிர வைத்த படம் 'அசுரன்'. பூமணியின் 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்களிடையே அசத்தலான வரவேற்பை பெற்றது. 

இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள அசுரன் படத்தை, தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக் செய்ய முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. 

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகியோரும் தனுஷ் நடித்த சிவசாமி கேரக்டரில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதேபோல், திரைபிரபலங்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பலரும் அசுரனை வெகுவாகப் பாராட்டினர். 

இப்படி, அனைத்து தரப்பினரின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்த தனுஷ், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அடுத்தக்கட்ட படப்பணிகளை தொடங்க தயாராகிவிட்டார். 

அதன்படி, கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் 'D-40' மற்றும் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கும் 'பட்டாஸ்' ஆகிய படங்களின் ஷுட்டிங்கில் பங்கேற்க தனுஷ் முடிவு செய்துள்ளார். 

தற்போது, 'D-40' படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் தனுஷ், வரும் நவம்பர் 5ம் தேதிக்குள் படத்தை முடித்து கொடுக்க திட்டமிட்டுள்ளாராம். 

அதன் பின்னர், சென்னை திரும்பும் அவர், 'பட்டாஸ்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளாராம். இதற்காக, 12 நாட்கள் தனுஷ் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். தனுஷின் வேகத்தை பார்க்கும் போது, இந்த ஆண்டே இவ்விரு படங்களும் ரிலீஸ் ஆனாலும் ஆச்சரியமில்லை. vvvvvv