வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "அசுரன்" திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி, பட்டி, தொட்டிகளில் எல்லாம் பட்டையைக் கிளப்பியது. இதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் "பட்டாஸ்" படத்தில் நடித்துள்ளார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் புதுப்பேட்டை படத்திற்கு பிறகு தனுஷ் உடன் சிநேகா நடித்துள்ளார். மேலும் மற்றொரு நாயகியாக மெஹ்ரின், நாசர், முனிஷ்காந்த், சதீஷ் உள்ளிட்டோர்  நடித்துள்ளனர். 

விவேக் - மெர்வின் இசையில் சமீபத்தில் வெளிவந்த "ச்சில் ப்ரோ" பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது "பட்டாஸ்" படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் "ச்சில் ப்ரோ" கதாபாத்திரத்தில் எங் லுக்கில் அசால்ட் பண்ணிய தனுஷ், மற்றொரு கெட்டப்பில் தெறிக்கவைத்துள்ளார். முறுக்கு மீசை, ருத்ராட்சம் அணிந்து தனுஷ் முறைத்த படி நிற்கும் அந்த போஸ்டர் அவரது ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் பொங்கல் ரேஸில் இருந்து தனுஷ் விலகிவிட்டதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்திய சமயத்தில், சரவெடியாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.பட்டாஸ் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், அதில் ஜனவரி 16ம் தேதி படம் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொங்கல் பந்தயத்தில் கலந்துகொள்ள உள்ள தனுஷ், மாமனாருடன் மோதுவதையும் தவிர்த்துள்ளார். 

அது எப்படி "தர்பார்" படமும் பொங்கலுக்கு தானே ரிலீஸ்  செய்யப் போறதா சொல்றாங்க, அப்புறம் எப்படி மோதல் தவிர்க்கப்பட்டதுன்னு கேட்குறீங்களா?. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" படத்தை பொங்கலுக்கு முன்னதாகவே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஜனவரி 9ம் தேதி தர்பார் படத்தை வெளியிட உள்ளதாகவும், அதனால் வசூலில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும் தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல். இப்போ புரியுதா ஏன் மோதல் இல்லைன்னு?.