வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையுலகையே அதிர வைத்த படம் 'அசுரன்'. பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்களிடையே அசத்தலான வரவேற்பை பெற்றது. 

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியின் 4-வது படமாக வந்த அசுரனை, தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வெகுவாகப் பாராட்டினர். 


அசுரன் படத்தின் அசுரத்தனமான வெற்றிக்குப் பிறகு, கவுதம் மேனன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம், வரும் நவம்பர் மாதம் 29ம் தேதி ரிலீசாகவுள்ளது.


இதனையடுத்து, கார்த்திக் சுப்புராஜின் 'D-40' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கும் 'பட்டாஸ்' என தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி வருகின்றன. இதில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'D-40' படத்தின் ஷுட்டிங், அண்மையில் நிறைவடைந்தது. 
அதன் பின்னர், சென்னை திரும்பிய தனுஷ், 'பட்டாஸ்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பார் என கூறப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் நடக்கும் பட்டாஸ் படத்தின் படப்பிடிப்பில்  இன்று முதல் தனுஷ் பங்கேற்றுள்ளதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து  தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, 12 நாட்கள் தனுஷ் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் நடிகை ஸ்னேகாவும், வில்லனாக நவீன் சந்திராவும் நடிக்கின்றனர். 

விவேக் - மெர்வின் இசையமைக்கும் இந்தப்படத்துக்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். திட்டமிட்டபடி பட்டாஸ் படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு, டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து தனுஷிடமிருந்து அடுத்தடுத்து வரும் அப்டேட்கள், போட்றா வெடிய! என சொல்லும்படி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.