தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ என அடுத்தடுத்து படங்களை முடித்துவிட்டு, தற்போது இந்தியில் அட்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக தனுஷை வைத்து ‘ராஞ்ஜனா’ என்ற படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இதில் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். 

 நெட் பிளிக்ஸ் தயாரிக்கும் “தி கிரே மேன்” என்ற படத்தில் தனுஷ் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்க் கிரேனியின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் தனுஷுடன் ஜெசிக்கா ஹென்விக், வாக்னர் மோரா, கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி ஆர்மஸ் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.  “தி கிரே மேன்” படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் என அழைக்கப்படும்  அந்தோணி மற்றும் ஜோ ரூசோ இயக்க உள்ளனர். 

இந்த அறிவிப்பு வெளியான மறுகணமே ட்விட்டரில் #Dhanush ஹேஷ்டேக் ட்ரெண்டாக ஆரம்பித்தது. இதையடுத்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் ‘ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கவிருக்கும் 'தி க்ரே மேன்' படத்தில் இணைவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.ஆக்‌ஷன் நிறைந்த இந்த படத்தில் இணைந்து வேலை செய்ய ஆவலாக இருக்கிறேன்.இத்தனை ஆண்டுகளாக எனக்கு அன்பும்,ஆதரவும் தந்த உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்’என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்து கூறி வருகின்றனர்.