தர்பார்’படத்துடன் மோதவேண்டாம்...தயாரிப்பாளருக்கு முட்டுக்கட்டை போட்ட தனுஷ்...
இப்படத்தின் படப்பிடிப்பு 95 சதவிகிதத்துக்கும் மேல் முடிந்து சிறிய அளவிளான பேட்ச் ஒர்க்குகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், ‘பேட்ட’படத்துடன் தனது ‘விஸ்வாசம்’படத்தை மோதவிட்டது போலவே, தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் ஆசைப்பட்டதாகத் தெரிகிறது.
பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் ‘தர்பார்’படத்துடன் தனுஷின் ‘பட்டாஸ்’படம் மோதுகிறது என்று தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அதற்கான வாய்ப்புகள் முற்றிலும் மங்கிவிட்டன. அவ்வாறு ரஜினி படத்துடன் மோதுவதை தனுஷ் விரும்பவில்லை என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம்.
‘கொடி’படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் தந்தை மகனாக நடித்திருக்கும் படம் பட்டாஸ். இதில் தந்தை தனுஷுக்கு ஜோடியாக நடிகை சிநேகாவும் மகன் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரிசாடாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 95 சதவிகிதத்துக்கும் மேல் முடிந்து சிறிய அளவிளான பேட்ச் ஒர்க்குகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், ‘பேட்ட’படத்துடன் தனது ‘விஸ்வாசம்’படத்தை மோதவிட்டது போலவே, தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் ஆசைப்பட்டதாகத் தெரிகிறது.
அவரது ஆசையும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து செய்திகளாக வந்துகொண்டிருந்த நிலையில் அதற்கு தற்போது முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் ரஜினியின் மருமகனான தனுஷ். அசுரனைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் தனது ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’படம் ரிலீஸாவதால் அடுத்த படத்துக்கு நல்ல இடைவெளி வேண்டும். அதனால் பிப்ரவரியில் ‘பட்டாஸ்’படத்தை ரிலீஸ் செய்தால் போதும் என்று தியாகராஜனிடம் கறாராகச் சொல்லிவிட்டாராம் தனுஷ். சாதாரண ஹீரோக்கள் சொல்லையே தயாரிப்பாளர்கள் தட்டமுடியாது என்கிற நிலையில் பெரிய இடத்துப்பிள்ளையின் பேச்சை அவ்வளவு எளிதாய் மீறிவிட முடியுமோ?