இது தான் நிரந்தரம்! தாணு கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த தனுஷ்!

நடிகர் தனுஷின் 36 வது  பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்த தான முகாமில் கலந்துகொண்டு, அவருக்கு ’இளைய சூப்பர் ஸ்டார்’ என்ற  பட்டத்தை தயாரிப்பாளர் தாணு அளித்துள்ளார்.

இன்று (ஜூலை 28) நடிகர் தனுஷ் தனது 36-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதை தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா, தாய் விஜயலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் தாணு, சத்யஜோதி தியாகராஜன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதலில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தாணு பேசும் போது, “ஜூலை 28-ம் தேதி தனுஷுக்கு பிறந்த நாள். அன்றைய நாள் தமிழ் திரையுலகுக்கு மறக்க முடியாத நாள் என்று சொல்லலாம். என்னை ஈன்றெடுத்த தந்தையே, உங்களுக்கு எப்படிபட்ட பிள்ளையாக நடக்கிறேன் பாருங்கள் என்று நடந்து கொண்டிருக்கிறார். அதற்கு இங்கு கூடியிருக்கும் தனுஷ் ரசிகர்களே சாட்சி. 

இந்தியாவிலிருக்கும் அனைத்து இயக்குநர்களும், நடிகர்களும் தனுஷுடன் பழக வேண்டும். அவரை வைத்துப் படம் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு தன் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். எந்தக் காலகட்டத்திலும், எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்கக்கூடிய திறமையைக் கொண்டவர் தனுஷ். அவர் 100 ஆண்டுகள் கடந்து வாழ்ந்தாலும், சிறப்பாக நடித்துக்கொண்டே இருப்பார். அவரது வாழ்க்கையில் இன்னும் மிகப்பெரிய சிறப்புகளும், செல்வாக்குகளும், செல்வங்களும் வந்து சேரும். அவருடைய பிறந்த நாளில் நீங்கள் எல்லாம் ரத்த தானம் செய்கிறீர்கள். இது வேறு எந்த நடிகருக்கும் வாய்த்ததில்லை. அப்படியொரு சிறப்பு தனுஷுக்கு கிடைத்திருக்கிறது. தனுஷுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதோடு, இன்று முதல் இளைய சூப்பர் ஸ்டாராக பவனி வரப்போகிறார்” என்றார் தயாரிப்பாளர் தாணு. சாட்சாத் ரஜினிக்கும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்கியவரும் இதே தாணுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த இளைய சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை ஏற்றாக மறுத்துள்ளார் தனுஷ். இது குறித்து அந்த ரத்ததான முகாமில் பேசிய, தனுஷ், தனக்கு தனுஷ் என்கிற பெயர் மட்டுமே போதும். இளைய சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் தேவையில்லை. என் மீது உள்ள அன்பு மிகுதியால், தாணு இப்படி ஒரு பட்டத்தை கொடுத்திருக்கிறார் என்று கூறினார்.

மேலும், தன்னுடைய ரசிகர்கள் அனைவரும், யார் மீதும் பகைமை காட்டாமல் அன்புடன் இருக்க வேண்டும் என்றும், விரைவில் அனைத்து ரசிகர்களையும் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கென, ஒரு பட்டம் சூட்டி கொள்ளும் நிலையில் தனுஷ் அவருக்கு கொடுத்த பட்டத்தை வேண்டாம் என தூக்கி இருந்துள்ளது, ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.