தனுஷ் - அனிருத் வெற்றி கூட்டணி சேர்ந்து தமிழ் சினிமாவில் பல சாதனைகளை செய்துள்ளனர். அனிருத் இசையில் தனுஷ் பாடிய "கொலவெறி" பாடல் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி ஃபாரின் வரை செம்ம ஹிட்டானது. சிவகார்த்திகேயன், தனுஷ் இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போது சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்ததால் தனுஷ் அவரிடம் இருந்து விலகியதாகவும் விதவிதமான தகவல்கள் கோலிவுட்டை வட்டமிட்டு வந்தன. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி, #Askaniruth என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அனிருத் "விரைவில் இணைவோம்" என்று கூறியிருந்தார். DNA காம்பினேஷனை மீண்டும் பார்க்கப்போறோம் என்ற மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ரசிகர்களுக்கு, இன்று "பட்டாஸ்" படம் குறித்து வெளியான அதிரடி தகவல் டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. 

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள "பட்டாஸ்" திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இதில் சினேகா, மெஹரீன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான "ச்சில் ப்ரோ", "முரட்டு தமிழன் டா" ஆகிய பாடல்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 

இந்நிலையில் "பட்டாஸ்" படத்தில் மாஸ் பாடல் ஒன்றை அனிருத் பாடியுள்ளாராம். "பட்டாஸ்" படத்தின் 3வது பாடலான அதை நாளை வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ்-அனிருத் கூட்டணியில் வெளியாக உள்ள அந்த பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.