ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துவிட்டு இருபது வருடங்களுக்கும் மேலாக காணாமல் போயிருந்த பிரபல இசையமைப்பாளர் தேவேந்திரன் மீண்டும் தமிழ்ப் படங்களில் எண்ட்ரி ஆகியிருக்கிறார். அவரது அடுத்த இன்னிங்ஸ் ‘பச்சை விளக்கு’படத்தின் மூலம் துவங்கியிருக்கிறது.

இயக்குநர் பாரதிராஜாவின்  ‘வேதம் புதிது’ படப்பாடல்களை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படத்தில் ‘கண்ணுக்குள் நூறு நிலவா’ துவங்கி அத்தனையும் சூப்பர் ஹிட் பாடல்களாகக் கொடுத்தவர் தேவேந்திரன். அடுத்து‘மண்ணுக்குள் வைரம்’, ‘கனம் கோட்டார் அவர்களே’, ‘காலையும் நீயே மாலையும் நீயே’, ‘மேளம் கொட்டு தாலிக்கட்டு’, ‘உழைத்து வாழ வேண்டும்’ உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்த அவர் 2000ம் ஆண்டு வெளிவந்த ‘உனக்காக மட்டும்’படத்தோடு காணாமல் போனார். அடுத்த பத்து ஆண்டுகளில் அவரது இசையமைப்பில் வெளியான ஒரே தமிழ்ப்படம் ‘மூனாறு’மட்டுமே.

இப்போது ‘பச்சை விளக்கு’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இந்தப் படத்தில் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் மகேஷ் இருவரும் நாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக புதுமுகங்கள் தீஷா, தாரா இருவரும் நடித்துள்ளனர். கன்னட பட உலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ரூபிகா முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்க, மேலும் மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘மெட்ராஸ்’ புகழ் நந்து, நாஞ்சில் விஜயன், க்ரிஷ், மடிப்பாக்கம் சுரேஷ், ராதா, நடன இயக்குனர் சிவசங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சாலை பாதுகாப்பு சம்பந்தமாக இந்தியாவிலேயே முதன்முதலாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை எழுதி டைரக் ஷன் செய்துள்ளார், டாக்டர் மாறன். பாடல்களை பழனிபாரதி, விஜய்சாகர், டாக்டர் மாறன், டாக்டர் கிருதயா ஆகியோர் எழுத, தேவேந்திரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் தேவேந்திரன் தனது அடுத்த இன்னிங்ஸை துவங்குகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.