ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார்.  இந்த திரைப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், மகளாக நிவேதா தாமஸும், வில்லனாக சுனில் ஷெட்டியும் நடித்திருந்தனர். லைகா புரொடக்‌ஷன் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இந்த படத்திற்கு, ராக் ஸ்டார் அனிரூத் இசையமைத்திருந்தார். 

பொங்கலை முன்னிட்டு கடந்த 9ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸானது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தர்பார் திருவிழாவாக கொண்டாடினர். என்ன தான் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் அண்ட் எங் லுக்கை பார்த்து கொண்டாடினாலும், படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. 

படம் வெளியாகி 4 நாட்களில்  150 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்று  கூறப்படுகிறது. 65 கோடி ரூபாய் கொடுத்து படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தர்பாரால் மிகப்பெரிய நஷ்டம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து தர்பார் பட நஷ்டம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திப்பதற்காக செங்கல்பட்டு உள்ளிட்ட சில ஏரியாக்களின் விநியோகஸ்தர்கள் ராகவேந்திரா மண்டபத்தில் கூடி ஆலோசனை செய்துள்ளனர். இதையடுத்து தங்களுக்கு ஏற்பட்ட பெருத்த நஷ்டத்தை ஈடு செய்ய இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்தனர். 

இதற்காக 9 மாவட்டங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி இல்லத்திற்கு இன்று மதியம் சென்றுள்ளனர். ஆனால் விநியோகஸ்தர்களை இன்று சந்திக்க முடியாது என்றும், நாளை சந்திப்பதாகவும் ரஜினி தரப்பிலிருந்து உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.