ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் "தர்பார்" படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2.O பட விநியோகத்தின் போது பெற்ற பணத்தை திரும்ப  தராமல் மோசடி செய்ததாக மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய் கிரியோஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் லைகா நிறுவனம் இதற்கு முன்பு ரஜினியை வைத்து தயாரித்த 2.O படத்திற்காக லைகா தங்களது நிறுவனத்திடம் இருந்து ரூ.12 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும், அதை திருப்பி செலுத்தாததால் தற்போது 23 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிலுவைத் தொகையை தராமல் லைகா நிறுவனம் தர்பார் படத்தை வெளியிடக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது. 

அந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தங்களுக்கு எவ்வித கடனும் இல்லை என்றும், மனுதாரர் தரப்பில் இருந்து தான் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் தர வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் தர்பார் படத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு தரவேண்டிய தொகைக்கு பதிலாக காலா படத்தின் சிங்கப்பூர் உரிமையை அளித்துள்ளதாக பதில் மனுவில் தெரிவித்துள்ளனர். ஆனால் அது போன்ற எந்த ஒப்பந்தம் செய்யவில்லை என தெரிவித்தார். இதையும் மறுத்த லைகா நிறுவனம், அதற்கான ஒப்பந்தம் தங்களிடம் உள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.