தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் முன்வைத்துள்ள விமர்சனத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். 

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. இதில், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் அனிருத், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ், ரஜினிகாந்த் பப்ளிசிட்டிக்காக அரசியலுக்கு வருவதாக நாம் தமிழர் கட்சி சீமான் பேசிவருவதை மறைமுகமாக சாடினார். சீமானின் பேச்சு நாட்டிற்கு நல்லது அல்ல என்று விமர்சித்த லாரன்ஸ், இந்த வயதில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டியதன் அவசியம் என்ன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீமான் இந்தியா போன்ற இத்தனை பெரிய நாட்டில் ஒரு வெங்காயத்தை மக்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை என்பது அவமானமாக உள்ளது. நான் வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு உண்பது இல்லை என்று பொறுப்புள்ள பதிவியில் இருக்கும் மத்திய அமைச்சர் பேசும் பேச்சா இது என்றார். 

இதையடுத்து தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில் தெலங்கானாவில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை மக்கள் உணர்வோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழும் போது உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என்றார். 

மேலும், தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் சீமான் பேசுவது நாட்டுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார் இது குறித்த கேள்விக்கு, பதிலளித்த சீமான் “தம்பி ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என்று தெரியவில்லை. நான் என் நாட்டிற்காக பேசி வருகிறேன். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி தயாராக இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் எங்கள் வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.