ஆழ்துளைக் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்க முடியாமல் மாண்டுபோன சுர்ஜித்தின் பெற்றோர் ஒரு அனாதைக் குழந்தையைத்  தத்தெடுத்து அக்குழந்தைக்கு சுர்ஜித் என்று பெயரிட்டு வளர்க்கவேண்டும் என்று பிரபல டான்ஸ் மாஸ்டரும் இயக்குநரும் நடிகருமான ராகவேந்திரா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

82 மணி நேரங்களுக்கும் மேலான போராட்டங்களுக்குப் பின் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சுஜித்தின் இழப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களை சொல்லவொண்ணாத் துயரில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த இழப்புக்கு ஆதரவாக இந்தியப் பிரதமர் மோடி முதல் பலதரப்பட்ட அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் சுர்ஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் தனது 29 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை சுர்ஜித்தின் மறைவை ஒட்டி நிறுத்தி வைத்த லாரன்ஸ் அவனது பெற்றோருக்காக ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில்,...“ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டுச்சென்று விட்டான் சுர்ஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது. இந்நிலையில் சுர்ஜித்தின் பெற்றோருக்கு சொல்ல விரும்புவது.சுர்ஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான்.

அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை தத்து எடுத்து அந்த பிள்ளைக்கு சுர்ஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் ” அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுர்ஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுர்ஜித்தும் தங்களுடனே இருப்பான். அப்படி நீங்கள் குழந்தையைத் தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்’என்று தெரிவித்துள்ளார் அவர்.