தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்துக்கான பிம்பத்தை உடைத்தவர்களில் மிக முக்கியமானவர் பிரபுதேவா! 
‘எலும்புகள் இல்லாமல் வாங்கிவந்த தேகம் இது!

ரப்பர் போல சொன்னபடி துள்ளுதப்பா’-_ என்று என்னதான் டான்ஸில் தெறிக்க விட்டாலும் ஹீரோ ஆக வேண்டுமென்றால் அதற்கென்று சில வரையறைகளை வைத்திருந்தது தமிழ் சினிமா. ஆனால் அதை அடித்து நொறுக்கியது பிரபுதேவாவின் அசத்தல் கிராஃப். 

பீடி போல் பாடி வைத்திருந்த பிரபுதேவா ஷங்கரின் மெகா பிராஜெக்ட்டான காதலனில் கழுக்மொழுக் நக்மாவுடன் ஜோடி சேர்ந்தபோது களுக்கென்று சிரித்தார்கள் அப்போது இன்டஸ்ட்ரியில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த சாக்லேட் ஹீரோக்கள். ஆனால் படம் பிளாக்பஸ்டர் ஹிட். இன்று வரை காதலன் படத்தின் பாடல்கள் தகர்க்க முடியாத தனி இடத்தை பெற்றுள்ளன. 

இப்படி கலக்க துவங்கிய பிரபுதேவா அதன் பிறகு படங்களை சூஸ் செய்வதில் பிழை செய்து மளமளவென ஃபிளாப்புகளை கொடுத்து மெதுவாக தமிழ் சினிமாவிலிருந்து நகர்ந்தார். 

திடீரென இந்தி சினிமாவில் இயக்குநராக நுழைந்தவர் அக்‌ஷய்குமாரை வைத்து அதிரடி சரவெடி படங்களை கொடுத்தபோது இந்திய திரையுலகம் அவரை வாய் பிளந்து நோக்கியது. இந்தி படங்களுக்கே உரிய கலரை மாற்றிப் போட்டு மெர்சலாக்கினார். 

பிறகு மீண்டும் போக்கிரி மூலம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குநராக நுழைந்து அதகளம் செய்த பிரபுதேவாவை ‘தேவி’ மூலமாக மீண்டும் ஹீரோவாக்கினார் ஏ.எல்.விஜய். ஒரு பக்கா தமிழ்ப்படமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாவிட்டாலும் கூட நல்ல வரவேற்பை பெற்ற தேவி, பிரபுதேவாவுக்கு நடிகராக அடுத்த ரவுண்டை அம்சமாக துவக்கி கொடுத்திருக்கிறது. 

ஹன்ஸிகாவுடன் குலேபகாவலி, லட்சுமி மேனனுடன் யங் மங் சங், சாய்பல்லவியுடன் கரு என்று அடுத்தடுத்து ஹீரோ அரிதாரம் பூசி கிளப்பிக் கொண்டிருக்கும் பிரபுதேவா மெர்க்குரி எனும் புதிய படத்தில் வில்லன் அவதாரமெடுக்கிறார். ‘இட்ஸ் டிஃபரெண்ட்’ என்று அந்த கதையும், அந்த கதாபாத்திரமும் அவரை நினைக்க வைத்ததால் இந்த முடிவாம். 

தமிழ் சினிமாவில் வில்லனின் அடையாளம் தாடி. ஆனால் எப்பவும் தாடி இருக்கிறதென்பதற்காக பிரபுதேவாவை வில்லனாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்பார்களா என்பது புதிரே! ஆனாலும் பிரபுதேவாவின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். 

பீடி பாடியுடன் வந்த பிரபுதேவா ஹாட் ஹீரோ, காஸ்ட்லி இயக்குநர் என்று தடம் பதித்துவிட்டு இன்று கேடி வில்லனாக தனது ஸ்டெப்ஸை மாறியிருப்பது ஆஸம்!
வாழ்த்துக்கள் வில்லன்.