சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் இசையமைப்பாளர்கள் போட்டியிலிருந்து அனிருத் வெளியேறிவிட்டதாகவும் இயக்குநரின் விருப்பப்படி டி. இமானையே இசையமைப்பாளராக கமிட் பண்ணிக்கொள்ளும்படி ரஜினி கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாகவும் அப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைவர் 168 என்று பெயரிடப்பட்டுள்ள ரஜினியின் அடுத்த படம் மிக விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதன் டெக்னீஷியன்களில் 90 சதவிகிதம் பேர் இயக்குநர் சிவாவின் ‘விஸ்வாசம்’உள்ளிட்ட முந்தைய படங்களில் பணியாற்றியவர்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் ஓ.கே.சொல்லியிருந்த ரஜினி இசையமைப்பாளராக ‘பேட்ட’ காம்பினேஷன் அனிருத்தை கமிட் செய்ய ஆசைப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் முந்தைய கசப்பான அனுபவங்களால் அனிருத்துடன் இணைந்து பணியாற்ற சிவா விரும்பவில்லை. தனது கருத்தை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மூலம் ரஜினிக்கு சொல்லி அவரது பதிலுக்காகக் காத்திருந்தார் சிவா.

இந்நிலையில், பொதுவாக இயக்குநர்களின் விருப்பங்களுக்கு குறுக்கே நிற்க விரும்பாத ரஜினி, சிவாவின் விருப்பப்படியே இசையமைப்பாளரை நியமித்துக்கொள்ளட்டும் என்று பதில் அனுப்பியிருக்கிறார். தற்போது அப்படத்துக்கு டி.இமான் தான் இசையமைப்பாளர் என்பது ஏறத்தாழ முடிவாகிவிட்டது.இதன் மூலம் ரஜினி படத்துக்கு முதன் முதலாக இசையமைக்கும் ஜாக்பாட் இமானுக்கு அடித்திருக்கிறது.