"மூடர் கூடம்" நவீன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் "அக்னி சிறகுகள்". விஜய் ஆண்டனி, அருண் விஜய் ஆகியோர் நடிக்கும் அப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்து வருகிறார். முதலில் இந்த படத்தில் நடிக்க, தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹீரோயின் ஷாலினி பாண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் தற்போது ஷாலினி பாண்டேவிற்கு பதிலாக அக்‌ஷரா ஹாசனை ஹீரோயினாக வைத்து ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ஷாலினி பாண்டே நீக்கம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் சிவா விளக்கம் அளித்துள்ளார். "அக்னிச் சிறகுகள்" படத்தில் நடிக்க ஷாலினி பாண்டேவிற்கு ரூ.35 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, ரூ.15 லட்சம் அட்வான்ஸாக வழங்கப்பட்டதாகவும், 100 நாட்கள் கால்ஷீட் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் சுமார் 27 நாட்களுக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி ஷூட்டிங் சென்றுள்ளது. எனவே அருண் விஜய், விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே ஆகியோரை வைத்து 40 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டது. 

மற்ற நடிகர்கள் கால்ஷீட் கொடுத்த நிலையில், நான் இந்தியில் நடிக்க செல்வதால் கால்ஷீட் தர முடியாது என மறுத்துள்ளார். மேலும் அருண் விஜய், விஜய் ஆண்டனி ஒன்றாக நடிப்பது கஷ்டம் என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், ஷாலினி பாண்டே அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம். எனவே தான் ஷாலினி பாண்டேவை படத்தில் இருந்து நீக்கிவிட்டு அக்‌ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்ததாக சிவா விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் ஷாலினி பாண்டே மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் சிவா தெரிவித்துள்ளார். இந்தி படத்தை நம்பி, தமிழ் படத்தை கைவிட்ட ஷாலினி பாண்டே இப்போது தேவையில்லாத சிக்கலில் சிக்கியுள்ளார்.