தமிழில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவரும் தமிழ் பிக் பாஸ் சீசன் 2  நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன்  12  நிகழ்ச்சி நாளை தொடங்கவிருக்கிறது. எப்போதும் போல் இல்லாமல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை மிகவும் வித்தியாசமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் நிகழ்ச்சியாளர்கள்.

அந்தவகையில் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அதிகக் கவனம் செலுத்தி வந்தனர். பிரபல நடிகர், நடிகைகள் இதில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய இந்திய கிரிக்கெட் அணி வீரரும், நடிகருமான ஸ்ரீசாந்தும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பிக் பாஸ் குழு வெளியிட்டிருக்கிற அதன் புரோமோ வீடியோவிலும் ஒரு கிரிக்கெட் வீரர் தனது கையில் பந்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதுபோலக் காட்டப்பட்டுள்ளது. அதை உன்னிப்பாகக் கவனிக்கையில் அந்த நபர் ஸ்ரீசாந்தாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சைகள் நிறைந்த நிகழ்ச்சியாக வலம்வருகிறது. ஸ்ரீசாந்தோ சக வீரருடன் கிரிக்கெட்டில் மோதிக்கொண்ட சர்ச்சை, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு கிரிக்கெட் விளையாட தடை, அரசியல் வட்டாரத்தில் நெருக்கம், திடீர் சினிமா எண்ட்ரி, என தன்னைத் தொடர்ந்து சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே வைத்துவருகிறார். இப்படியான சூழலில் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்த் கலந்துகொள்ள உள்ளதும்  சர்ச்சையாகவே பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி நாளை இரவு முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.