"ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள ’ஜிப்ஸி’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் தயாரிப்பாளர் அம்பேத்குமார் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இம்மாதம் இப்படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
        
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2014-ஆம் ஆண்டு அரசூர் மூவிஸ் உரிமையாளரான அம்பேத்குமார் ’பப்பாளி’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக என்னிடம் ரூ.40 லட்சம் வாங்கினார்.இந்த தொகையை 3 மாத காலத்துக்குள் வட்டியுடன் திரும்ப தருவதாகக் கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை.

இன்னொரு பக்கம் இந்தத் தொகையை ’பப்பாளி’ திரைப்படத்தை தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. ’பப்பாளி’ திரைப்படம் வெளியான பின்னரும்கூட அம்பேத்குமார் என்னிடம் வாங்கிய பணத்தை திரும்பத் தரவில்லை. இந்த நிலையில் நடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படத்தை அம்பேத்குமார் தயாரித்துள்ளார். என்னிடம் அவர் வாங்கிய பணம் ‘ஜிப்ஸி’ படத்தயாரிப்புக்கும் பயன்படுத்தப்பட்டது.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. எனவே என்னிடம் வாங்கியத் தொகையான ரூ.40 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.45 லட்சமாக தராமல் ’ஜிப்ஸி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சசிகலா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக தயாரிப்பாளர் அம்பேத்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.