லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்கானதால் படக்குழுவினர் கடும் அப்செட்டில் இருந்தனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் அந்த காட்சிகளை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். 

அந்த அதிர்ச்சியில் இருந்தே மாஸ்டர் படக்குழு மீளாத நிலையில், அதே நாளில் மற்றொரு பிரச்சனையும் கிளம்பியுள்ளது. கொரோனா பிரச்சனைகள் தமிழகத்தில் தீவிரமடையும் முன்னால் மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது காப்புரிமை இல்லாமல் மற்ற பட பாடல்களை சட்டவிரோதமாக ஒளிபரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

மும்பையைச் சேர்ந்த நோவெக்ஸ் கம்யூனிகேசன்ஸ் என்ற நிறுவனம் தமிழ் படங்களின் பாடல்கள் சிலவற்றின் காப்புரிமையை பெற்றுள்ளது. இது தொடர்பாக இந்த நிறுவனத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது எங்கள் நிறுவனம் காப்புரிமை பெற்ற 5 படத்தின் 6 பாடல்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது ஏற்கனவே சிபிசிஐடி போலீசில் புகாரளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றம், புகார் தொடர்பாக ஏன் விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிபிசிஐடி போலீசாருக்கு கேள்வி எழுப்பியது. மேலும், இந்த புகார் தொடர்பாக மாஸ்டர் படத்தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சிபிசிஐடி போலீஸ் எஸ்பிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.