நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடித்துள்ள ‘மஹா’ படம் இந்து மதத்தையும் அதன் பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்துவதாகக் கூறி  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ‘90 எம்.எல்’ படத்தில் நடிகை ஓவியா கஞ்சா அடிப்பதுபோல் இப்படத்தில் நடிகை ஹன்ஷிகா கஞ்சா அடித்து போஸ் கொடுத்துள்ளார்.

ஜமீல் என்னும் புதுமுக இயக்குநர் எட்செட்ரா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானியை நாயகியாகக் கொண்டு ‘மஹா’ என்ற படத்தை இயக்கிவருகிறார். புனித ஸ்தலம் ஒன்றில் காவி உடையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு ஹன்ஷிகா கஞ்சா புகைத்த இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகின.

அடுத்து  கிறிஸ்மஸ் வாழ்த்துச்சொல்லும் அப்பட போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஹன்ஷிகா இஸ்லாமிய உடையான புர்கா அணிந்தபடி தொழுதுகொண்டிருந்தார். பின்னால் இன்னோர் ஹன்ஷிகா துப்பாக்கியால் யாரையோ சுட்டுக்கொண்டிருந்தார்.இந்த போஸ்டர் மக்களை திருப்திப்படுத்தவில்லை. காவி உடையில் இருந்தால் தம் அடிப்பார். இஸ்லாமிய உடையில் இருந்தால் தொழுவாரா? சந்தேகமில்லாமல் நீ ஒரு இஸ்லாமிய மதவெறியன்தான்’ என்று  இயக்குநர் ஜமீல் மீது இன்னும் கடும்கோபத்துக்கு ஆளாகிவிட்டார்கள் இந்துமத ஆதரவாளர்கள்.

இந்த போஸ்டர், இந்து மத உணர்வுகளையும், பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இந்து மக்கள் முன்னணியின்  அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் புகார் அளித்திருந்தார். புகார் மீது நடவடிக்கை இல்லை.இதையடுத்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி நாராயணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் மனுதாரரின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் பதிலளிக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

பெண் துறவிகளை கொச்சைப் படுத்துவது போல அமைக்கப்பட்டுள்ள காட்சியில் நடித்த  நடிகை ஹன்ஷிகா மீதும்  நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சென்னை போலீஸ் கமிஷனர் பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.