- Home
- Cinema
- ரஜினிக்கு தேவா செதுக்கிய இசை சிம்மாசனம்! ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்த சூப்பர் ஸ்டாரின் 'மாஸ்' இன்ட்ரோ பாடல்கள்!
ரஜினிக்கு தேவா செதுக்கிய இசை சிம்மாசனம்! ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்த சூப்பர் ஸ்டாரின் 'மாஸ்' இன்ட்ரோ பாடல்கள்!
ரஜினி-தேவா கூட்டணி ஒரு வெற்றி தொழிற்சாலையாக விளங்கியது. அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் போன்ற படங்களில் இவர்களின் இசை, ரஜினியின் மாஸ் பிம்பத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இவர்களின் இன்ட்ரோ பாடல்களும், பின்னணி இசையும் இன்றும் கொண்டாடப்படுகின்றன.

திரையரங்குகளில் விசில் சத்தம் ஓயவே இல்லை.!
தமிழ் திரையுலகில் ஒரு நடிகரின் வருகைக்காகத் திரையரங்குகள் போர்க்களமாக மாறுவது ரஜினிகாந்த் என்ற ஒற்றைப் பெயருக்குத்தான். அந்தப் பிம்பத்திற்கு உயிரூட்டி, ரசிகர்களின் நாடித் துடிப்பை எகிறச் செய்ததில் 'தேனிசைத் தென்றல்' தேவாவிற்கு மிகப்பெரிய பங்குண்டு. 90-களில் ரஜினி-தேவா கூட்டணி என்பது வெறும் கூட்டணி அல்ல; அது ஒரு 'வெற்றித் தொழிற்சாலை'. தேவாவின் துள்ளல் இசையும், ரஜினியின் மின்னல் வேக ஸ்டைலும் இணைந்தபோது, திரையரங்குகளில் விசில் சத்தம் ஓயவே இல்லை. அமாங்க, இதெல்லாம் உண்மைதான் மக்களே.!
இன்ட்ரோ' பாடல்களின் இலக்கணம்.!
'ரஜினி படங்களுக்கு ஒரு வலுவான 'ஓப்பனிங் சாங்' இருக்க வேண்டும் என்ற கலாச்சாரத்தைத் தேவாவின் இசை ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றது.
அண்ணாமலை - வந்தேன்டா பால்காரன்
"அண்ணாமலை" படத்தில் சைக்களில் ரஜினி ஸ்டைலாக நுழையும்போது ஒலித்த அந்த "வந்தேன்டா பால்காரன்..." பாடல், இன்றும் ஒரு எனர்ஜி பூஸ்டர். கறவை மாட்டின் சத்தம், எஸ்பியின் கணீர் குரல், அதற்கு ரஜினி கொடுக்கும் ரியாக்ஷன்கள் என அந்தப் பாடல் ஒரு சரித்திரத்தையே உருவாக்கியது.
பாட்ஷா - ஆட்டோக்காரன்
ஆட்டோ ஓட்டுநர்களைத் தன்வசப்படுத்திய அந்தப் பாடல், தேவாவின் இசையில் உருவான ஒரு மாபெரும் புரட்சி. அந்தப் பாடலில் வரும் தாளக்கட்டு சாதாரண மக்களைக் கூட எழுந்து ஆட வைத்தது. இப்போதும் ஆயுத பூஜையின் போது எல்லா ஆட்டோ ஸ்டேன்ட்களிலும் இந்த பாட்டு மட்டுமே போடப்படுகிறது.
அருணாச்சலம் - அதாண்டா இதாண்டா
"அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான்தாண்டா" என்று ரஜினி பாடும்போது, ஒரு ஆன்மீகத் தெளிவும், அரசியல் வீச்சும் ஒருசேர ஒலித்தது. தேவா அந்தப் பாடலில் பயன்படுத்திய பிரம்மாண்டமான இசைக்கருவிகள் ரஜினியின் செல்வாக்கை மேலும் உயர்த்தியது.
பிஜிஎம் எனும் பின்னணி இசை.!
மேஜிக் பாடல்கள் ஒருபுறமிருக்க, 'பாட்ஷா' படத்தின் பின்னணி இசை தேவாவின் திறமைக்கு ஒரு மகுடம். மாணிக்கம் என்ற சாதுவான மனிதன், 'மாணிக் பாட்ஷா'வாக உருவெடுக்கும் அந்த இடைவேளைக் காட்சியில் தேவா கொடுத்த அந்தத் தீம் மியூசிக், உலகத் தரத்திலான ஒன்று. இன்றும் அந்த 'பாட்ஷா தீம்' ஒலித்தால் மெய் சிலிர்க்காத ரஜினி ரசிகர்களே இருக்க முடியாது.
உழைப்பாளிகளின் இசை நாயகன்
தேவாவின் இசையில் ஒரு சிறப்பு உண்டு. அவர் ரஜினிக்காகத் தரும் பாடல்கள் வெறும் 'ஹீரோ துதி' பாடுபவையாக இருக்காது; அவை உழைக்கும் மக்களின் வலியையும், தன்னம்பிக்கையையும் பேசுபவையாக இருக்கும். பால்காரன், ஆட்டோக்காரன் என விளிம்பு நிலை மனிதர்களின் அடையாளமாக ரஜினியை மாற்றியது தேவாவின் அந்த 'மாஸ்' இசைதான்.
அஜித்துக்காக போட்ட ட்யூன் ரஜினிக்கு போன கதை!
ரஜினியின் அடையாளமாக மாறிய "ஸ்டைலு ஸ்டைலு தான்" (பாட்ஷா) பாடல் உண்மையில் நடிகர் அஜித்திற்காக உருவானது. இயக்குனர் வசந்த் இயக்கத்தில் அஜித் நடித்த 'ஆசை' படத்திற்காக தேவா ஒரு ட்யூனை போட்டிருந்தார். ஆனால் அந்த ட்யூன் ஆசை படத்திற்கு செட் ஆகாது என்று வசந்த் மறுத்துவிட்டார். பின்னர் 'பாட்ஷா' வேலைகளின் போது இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் தேவா அந்த மெட்டைக் காட்ட, அவர் உடனே ஓகே சொன்னார். அதுதான் இன்றுவரை ரஜினியின் ஸ்டைலை பறைசாற்றும் பாடலாக இருக்கிறது.
அருணாச்சலம்: ஆன்மீகமும் துள்ளலும் இணைந்த பிரம்மாண்டம்
'அருணாச்சலம்' படத்தில் இடம்பெற்ற "மாத்தாடு மாத்தாடு" பாடல், தேவாவின் மிகச்சிறந்த மெலடிகளில் ஒன்று. எஸ்பிபி மற்றும் சித்ராவின் குரலில் அந்தப் பாடல் ஒரு அமைதியான நதியைப் போலப் பாயும். அதேசமயம், "சிங்கம் ஒன்று புறப்பட்டதே" பாடல் ரஜினியின் அரசியல் மற்றும் சமூக எழுச்சிக் கருத்துக்களைத் தாங்கி, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. வைரமுத்துவின் வரிகளுக்கு தேவா கொடுத்த அந்த வீரமான இசை, ஒரு போர்க்களத்தில் ஒலிக்கும் சங்கொலி போல அமைந்திருக்கும்.
பாட்ஷா: ஸ்டைலும் காதலும் கலந்த கலாட்டா
'பாட்ஷா'வில் ஆட்டோக்காரன் பாடலுக்குப் பிறகு, ரசிகர்களை அதிகம் ஈர்த்தது "ஸ்டைலு ஸ்டைலு தான்" பாடல். ரஜினியின் ஒவ்வொரு அசைவிற்கும் ஏற்ப தேவா அமைத்த அந்த மேற்கத்திய இசைக்கோர்ப்பு, சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலுக்கு ஒரு சர்வதேச அந்தஸ்தைக் கொடுத்தது. மறுபுறம், "தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு" என்ற பாடலும் "ரா ரா ராமையா" பாடலும் ஒரு கொண்டாட்டப் பாடலாக இன்றும் திருமண விசேஷங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
அண்ணாமலை: நட்பும் காதலும் சங்கமித்த இசை
'அண்ணாமலை' படத்தில் "கொண்டையில் தாழம்பூ" பாடல், ஒரு ஜாலியான கிராமியத் துள்ளலுடன் அமைந்திருக்கும். அதேபோல், ரஜினியின் ரொமான்டிக் பக்கத்தைக் காட்டிய "அண்ணமலை அண்ணாமலை... பாடல், தேவாவின் மெலடித் திறமைக்குச் சான்று. குறிப்பாக, இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்ட அந்த 'பெல்' சத்தங்களும், சித்ராவின் தேன் குரலும் ஒரு மென்மையான உணவைத் தருபவை. அதேபோல், ரஜினியின் வெற்றியைப் பறைசாற்றும் "வெற்றி நிச்சயம்" பாடல், தோல்வியில் இருப்பவர்களுக்கு இன்றும் ஒரு ஊக்க மருந்தாகத் திகழ்கிறது.
கன்னடக் கவிதையில் பிறந்த பால்காரன்!
"வந்தேன்டா பால்காரன்" பாடலின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. கன்னட கவிஞர் ஜி.வி. ஐயர் எழுதிய "நீனாரிகடையோ எலே மானவா" என்ற கவிதையை ரஜினிதான் தேவாவிடம் கொடுத்து, இது போன்ற ஒரு மெட்டு வேண்டும் எனக் கேட்டார். அதன் தாக்கத்தில், மராத்திய நாட்டுப்புறப் பாடலான “மீ டோல்கர்” என்பதன் மெட்டை அடிப்படையாக வைத்து தேவா இப்பாடலை உருவாக்கினார்.
ரசிகர்களை வசப்படுத்திய ரஜினி - தேவா கூட்டணி
தேவா - ரஜினி கூட்டணி என்பது காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவியம். ரஜினியின் உடல்மொழிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு 'பீட்'டையும் செதுக்கியவர் தேவா. அதனால்தான், பல தசாப்தங்கள் கடந்தும், அந்தப் பாடல்கள் ஒலிக்கும்போது இன்றும் ரசிகர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள். ரஜினிக்கு தேவா செதுக்கிய அந்த 'இசைச் சிம்மாசனம்' இன்றும் அசைக்க முடியாத உயரத்தில் இருக்கிறது!
தேவா வெறும் 'கானா' மன்னன் மட்டுமல்ல.!
ரஜினியின் 'தங்கச் சங்கிலி' பரிசு
'அண்ணாமலை' படத்திற்கு தேவா இசையமைக்கப் போகிறார் என்று தெரிந்ததும், ரஜினிக்கு ஆரம்பத்தில் ஒரு தயக்கம் இருந்ததாம். இளையராஜாவுக்கு நிகராக தேவா ஹிட் கொடுப்பாரா? என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. ஆனால் அண்ணாமலை பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்ததும், நெகிழ்ந்து போன ரஜினி தேவாவை நேரில் அழைத்து தனது கையாலேயே தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்தார்.
தேவா வெறும் 'கானா' மன்னன் மட்டுமல்ல, அவரால் ரஜினி போன்ற ஒரு பிம்பத்திற்குத் தேவையான மெலடியையும், தத்துவப் பாடல்களையும் செதுக்க முடியும் என்பதற்கு இந்த மூன்று படங்களே சாட்சி. இன்ட்ரோ பாடல்கள் விசில் சத்தத்திற்கு என்றால், இந்த மற்ற பாடல்கள் ரஜினியின் நடிப்பையும், கதையின் உணர்ச்சிகளையும் தாங்கிப் பிடித்த 'இசைத் தூண்கள்'.
சூப்பர் ஸ்டார் 'டைட்டில் மியூசிக்'
இன்று நாம் ஒவ்வொரு ரஜினி படத்திலும் பார்க்கும் அந்த "SUPER STAR" என்ற டைட்டில் கார்டு மற்றும் அதனுடன் ஒலிக்கும் 'க்ளக்.. க்ளக்..' பின்னணி இசை முதன்முதலில் அண்ணாமலை படத்திற்காக தேவாவால் உருவாக்கப்பட்டது. ஒரு சிறிய சிதார் இசை மற்றும் தாளக்கட்டுடன் கூடிய அந்த இசை, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியின் பிரம்மாண்டத்தை பறைசாற்றி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

