நந்தீஸ்-சுவாதி ஆணவப் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்க இன்று ஓசூர் விரைந்த இயக்குநர் பா.ரஞ்சித்,’இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது? இந்த கொடுந்துயருக்கு இப்போதே முடிவு கட்டுவோம்! சாதிக்குமுடிவுகட்டுவோம்’ என்ற கோஷத்துடன் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

கிருஷ்ணகிரியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி நந்தீஷ் - சுவாதி இருவரும் மாயமான நிலையில், கர்நாடகாவில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், நந்தீஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.  சுவாதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரையும் சாதி ஆணவ கொலை செய்திருக்கலாம் என கருதி, போலீஸார் சுவாதியின் அப்பா ஸ்ரீனிவாஸ், பெரியப்பா வெங்கடேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிகழ்வை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித்,  "இதோ நிகழ்ந்தேறி விட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை. வாய்பேச முடியாத காளைகள் கூட எங்கள் குடும்பத்தில் ஒன்று என போராடிய தமிழ் போராளி தோழமைகளே! வாய் பேச முடிந்த நந்தீஸ் - சுவாதி இவர்களை கொன்ற சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்! வாருங்கள் நீதி கேட்போம்! 

 தயவு செய்து தமிழக ஊடகங்களிடம் மன்றாடி கேட்டு கொள்கிறோம். துடைத்து அப்புறப்படுத்த வேண்டிய சாதி கேவலத்துக்கு எதிராக முழுவீச்சில் வினையாற்றுவோம். இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது? இந்த கொடுந்துயருக்கு இப்போதே முடிவு கட்டுவோம்! சாதிக்குமுடிவுகட்டுவோம்.

திரையுலக மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட தோழமைகளே! விழித்துகொள்வோம்!இன்னும் இன்னும் நம் குடும்பங்கள், நம் தெருக்கள், நம் ஊர்கள், நகரங்கள், நம் நாடு என, எல்லா இடங்களிலும் நீக்கமற இருக்கும் இந்த நூற்றாண்டின் கொடும் இழிவு, இந்த சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!" என பதிவிட்டுள்ளார்.