ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் டிக்கெட்டை திரையரங்க நிர்வாகமே பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது.

Coolie Tcket Price Hike : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் பொள்ளாச்சி தங்கம் திரையரங்கில் திரையரங்க நிர்வாகமே தியேட்டருக்கு பின்புறம் உள்ள இடத்தில் 190 ரூபாய் டிக்கெட் டிக்கெட்டை 400 ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் மாலை படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியது.

அதிக விலைக்கு விற்கப்படும் கூலி பட டிக்கெட்

இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையரங்குகளிலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் அமைந்துள்ள தங்கம் திரையரங்கில் திரையரங்க நிர்வாகமே டிக்கெட்டை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது.

திரையரங்கின் அருகே உள்ள காலி இடத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யும் முகாம் ஒன்றை அமைத்துள்ள திரையரங்க நிர்வாகம் 190 ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டை ஊழியர் மூலம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இன்று அந்த டிக்கெட்டை வாங்க சென்ற ரசிகர் ஒருவர் இது குறித்த காட்சியை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக டிக்கெட் வாங்க வருபவர்கள் பணமாக கொண்டு வந்து டிக்கெட் வாங்க வேண்டும் என்றும் டிக்கெட்டை போட்டோ வீடியோ எடுக்க கூடாது என்றும் திரையரங்க ஊழியர் கூறுவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு திரைப்படமானாலும் வரையறுக்கப்பட்ட விலைக்கு மேல் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது என விதிமுறை உள்ள நிலையில் கூலி திரைப்படத்தின் டிக்கெட் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.