40 கதையை கேட்டு தூங்கியதாக அஸ்வின் சொன்னது கோலிவுட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் கதை சொல்ல வந்த இயக்குனரை காக்க வைத்தது தற்போது தெரியவந்துள்ளது

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின் குமார். இந்நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சத்தை பெற்ற அஸ்வினுக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். சமூக வலைதளங்களில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு இணையாக இவருக்கும் பாலோவர்கள் கிடைத்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் அஸ்வினுக்கு பட வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி ‘என்ன சொல்ல போகிறாய்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் அஸ்வின். இதுவரை சமூக வலைதளங்களில் அன்பையும், ஆதரவையும் பெற்று வந்த அஸ்வின், கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த என்ன சொல்ல போகிறாய் (Enna Solla Pogirai) படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சால் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். 

கதை கேட்கும் போது கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன் என்றும் அவ்வாறு இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன் என அவர் பேசியதைக் கேட்டு கோலிவுட்டே கொந்தளித்தது. ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு ஆணவப் பேச்சு தேவையா என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நெட்டிசன்களும் மீம் போட்டு கலாய்த்தனர். இந்த எதிர்ப்பின் காரணமாக டிசம்பர் 24-ந் தேதி ரிலீசாக இருந்த என்ன சொல்ல போகிறாய் படத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், கதை சொல்ல வந்த இயக்குனரை அஸ்வின் காக்க வைத்தது தெரியவந்துள்ளது. அதன்படி, இயக்குனர் ஒருவர் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தை அணுகி கதை சொல்ல, அவர்களோ அஸ்வினை ஹீரோவாக பரிந்துரைத்து, அவரிடம் கதை சொல்லுங்கள் என்றார்களாம். 

இந்த விஷயத்தை அவர்கள் அஸ்வினிடம் சொன்னபோது, சென்னையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில், அதுவும் குறிப்பிட்ட எண் கொண்ட அறையில் தான் கதை கேட்பேன் என்று சொன்னாராம். தயாரிப்பு தரப்பு அந்த ரூமை புக் செய்து, இயக்குனரை கதை சொல்ல அனுப்பியுள்ளனர். ஆனால் அஸ்வின் நீண்ட நேரமாக வரவில்லையாம்.

இதையடுத்து அந்த இயக்குனர் அஸ்வினை தொடர்புகொண்டு பேசியபோது, எனக்கு இப்போ கதை கேட்கும் மூடே இல்லை. நாளைக்கு வந்து சொல்லுங்க என சொல்லிவிட்டாராம். இதை அந்த இயக்குனர் தயாரிப்பாளரிடம் சொல்ல, அவர் அந்த ஆளே நமக்கு வேண்டாம் எனக்கூறி விட்டாராம்.