'பம்பாய் படத்தை திரையிட்டதற்காக தீவிரவாதிகள் இயக்குநர் மணிரத்தினத்தின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசி வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். அந்த தீவிரவாத செயலுக்கும், நரேந்திர மோடி ஆட்சியில் தற்போது தொடுக்கப்படுகிற தேச துரோக  வழக்கிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை,அச்சுறுத்தல் குறித்து கடந்த ஜூலை மாதம் இயக்குநர்கள் மணிரத்னம். ஷியாம் பெனகல்,அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 49 கலைஞர்கள் பிரதமர் மோடிக்கு பகிரங்கக் கடிதம் எழுதியதற்காக அவர்கள் மீது பிஹார் காவல் நிலையம் ஒன்றில் தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு நடவடிக்கை நாடெங்கிலும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ள நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குநர்கள் ராஜீவ் மேனன், வெற்றிமாறன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,’“பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் இத்தகைய வன்முறைகள் தடுத்து நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையோடும், சமூக அக்கறையின் காரணமாகவும் 49 பேரும் இக்கடிதத்தை எழுதியுள்ளனர். அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பீகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைவிட ஜனநாயக விரோத, அச்சுறுத்தல் நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

’பம்பாய்’ படத்தை திரையிட்டதற்காக தீவிரவாதிகள் இயக்குநர் மணிரத்தினத்தின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசி வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். அந்த தீவிரவாத செயலுக்கும், நரேந்திர மோடி ஆட்சியில் தற்போது தொடுக்கப்படுகிற வழக்கிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் நாட்டில் உள்ள நிலைமைகள் குறித்து மகாத்மா காந்தி பலமுறை கடிதம் எழுதியிருக்கிறார். அவர்கள் பதில் கடிதம் எழுதினார்களே தவிர, மகாத்மா காந்தி மீது தேச துரோக வழக்கு தொடுக்கவில்லை. ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியை விட சர்வாதிகார நோக்கத்தில் நரேந்திர மோடி ஆட்சி செயல்படுவதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. நாட்டு நலனில் அக்கறையோடு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இவர்கள் மீது புனையப்பட்டிருக்கும் வழக்கை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்று தெரிவித்துள்ளார்.