கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என கமல்ஹாசன் பேசிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
Kannada Language Origins Debate : நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது படு ஜோராக நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர் தான் கமலின் எவ்வளவு பெரிய ரசிகன் என்பதை விவரித்து பேசினார்.
கமலின் பேச்சால் வெடித்த சர்ச்சை
இதையடுத்து மேடையேறி பேச வந்த கமல்ஹாசன், 'உயிரே உறவே தமிழே' என்று கூறி தன்னுடைய பேச்சை தொடங்கினார். பின்னர் கன்னட நடிகர் சிவராஜ்குமாரை சுட்டிக்காட்டி பேசிய கமல், அவர் வேறு மாநிலத்தில் வசிக்கும் தனது குடும்பம் என்று கூறியதோடு, கன்னடம் தமிழில் இருந்து உருவானது என்றும் பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு தான் தற்போது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. அவரின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கர்நாடக மாநில அரசியல்வாதிகள் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் இதைக் கண்டு அஞ்சாத கமல்ஹாசன், மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் அவர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகுமா என்கிற நிலை உருவாகி உள்ளது. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் அப்படத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்துவேன் என்றும் அம்மாநில அமைச்சரே வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
கமல் மீது போலீசில் புகார்
இந்நிலையில், கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என தக் லைஃப் விழாவில் பேசிய விவகாரம் கமல்ஹாசன் மீது பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கன்னடர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கன்னட அமைப்பின் நிர்வாகி பிரவீன் ரெட்டி என்பவர் புகார் அளித்துள்ளார். பெங்களூரு ஆர்.டி. காவல் நிலையத்தில் போலீசார் இந்த புகாரை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.
