பிக்பாஸ் நிகழ்ச்சியை தடைசெய்ய வேண்டும் என்பதுடன், ஆபாசங்களை தணிக்கை செய்யாமல் கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் அவருக்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும் என கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி  தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சென்னை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் அங்கு  திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வட சென்னை மேற்கு மாவட்டம் சார்பில், காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது அதில்,  பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் தனியார் தொலைக்காட்சியான  விஜய் டிவி சார்பில் அரங்கம் அமைத்து பிக்பாஸ் நிகழ்சி நடந்து வருகிறது.  இந்நிகழ்ச்சியை நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் கலாச்சாரத்தை கொச்சப்படுத்தும் விதமாகவும், முறையில் ஆபாசமாகவும் கொச்சையுமாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளவர்கள் பேசிவருகின்றனர். அவைகளை தணிக்கை செய்யாமல் நடிகர் கமல்ஹாசன் அப்படியே தொகுத்து வழங்கி வருகிறார்.  

இது சம்பந்தமாக தொகுப்பாளர் கமலிடம் தெரிவித்து நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்த வேண்டும்  என்று கூறப்பட்டுள்ளது , அந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட சென்னை நசரத்பேட்டை போலீசார் புகாரை பெற்றுக்கொண்டதற்கு சாட்சியாக சிஎஸ்ஆர் நகல் வழங்கியதுடன்  புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.