பிக்பாஸ் புகழ் சென்ராயனுக்கு குழந்தை பிறந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், சென்ராயனுக்கும் அவருடைய மனைவி கயல்விழிக்கும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் சென்ராயன்.  இவர் தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், இவருக்கு காமெடி நடிகர் என்கிற அடையாளத்தை கொடுத்தது மூடர்கூடம் படம்தான்.  மேலும் ஜீவா நடித்த 'ரௌத்திரம்' படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார்.

எனினும் இவருக்கு தமிழில் அதிகப்படியான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.  இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற  பிக்பாஸ் சீசன் 2 -ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இவரின் வெகுளித்தனமான பேச்சு,  எதார்த்தமான நடவடிக்கைகள்,  கள்ளம் கபடம் இல்லாத மனது, ரசிகர்களை இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

பிக்பாஸ் சீசன் 2 வில் வெற்றி பெற அனைத்து தகுதிகளும் இருந்தும் இவர் வெளியேற்றப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இந்த நிகழ்ச்சியின் போது ஒருமுறை, தனக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை என சொல்லி வேதனைப்பட்டார்.  மேலும் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க உள்ளதாக கூறினார்.

இவரின் நல்ல மனதுக்கு, பரிசு கிடைத்தது போல்...  இவருடைய மனைவி கயல்விழி,  சென்றாயன் பிக் பாஸ் வீட்டின் உள்ளே சென்ற பிறகு தான், நான் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததாகக் கூறி ஒரு பேட்டியில் கூறினார்.  இந்த தகவலை பிக்பாஸ் வீட்டில் உள்ளே சென்று சென்ராயனிடம் கூறி  அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்த தகவல் அறிந்ததும் நடிகர் சென்ராயன் நான் அப்பாவாங்கிட்டேன் என, தலைகால் புரியாமல் துள்ளி குதித்து கத்தி,  தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  இவரின் செய்கை பார்ப்பவர்களையே பிரமிப்பில் ஆழ்த்தியது.

மேலும் விஜய்டிவி தொலைக்காட்சி இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில் கயல்விழிக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து சென்ராயனுக்கும் அவருடைய மனைவி கயல்விழிக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.