தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரம்மா, கோவை சரளாவை தொடர்ந்து  தற்போது அதிக அளவில் காமெடி நடிகைகள் இல்லை என்றாலும், காமெடி நடிகர்களின் வருகை அதிகரித்து கொண்டே போகிறது. ஆனால் அனைவராலும் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடிந்ததா என்றால் அது சந்தேகம் தான்.

அந்த வகையில் 'இன்று நேற்று நாளை', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் கார்த்தி.  இவர் விஜய் நடித்த தெறி மற்றும் விக்ரம் நடித்த 10 எண்ணுறதுக்குள்ள போன்ற படங்களிலும்  நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் மீது சில பெண்கள் மீடூ-வில் பாலியல் புகார் தெரிவித்து டுவீட் செய்திருந்தனர். அதனை பாடகி சின்மயி ரீ-டுவீட் செய்திருந்தார். தற்போது இந்த புகார்களுக்கு பதில் அளித்துள்ள கார்த்திக், இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:

நான் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக மீ டூ வில் புகார்கள் வந்துள்ளன. பெண்களிடம் நான் மரியாதையாகவே நடந்து இருக்கிறேன். எந்த பெண்ணுக்கும் தொல்லை கொடுக்க நினைத்தது இல்லை. எனது சந்திப்பை அசவுகரியமாக கருதும் பெண்களை விட்டு நான் விலகி விடுவது உண்டு. என்னால் எந்த பெண்ணுக்காவது சங்கடம் நேர்ந்து இருந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மீ டூ இயக்கம் என்னை சுயபரிசோதனை செய்துகொள்ள உதவி இருக்கிறது. எனது தவறுகளுக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். இவ்வாறு கார்த்திக் கூறியுள்ளார்.