‘இன்னும் இரண்டே வாரங்களில் புதிய பட அறிவிப்புடன் நடிக்கத்துவங்குகிறேன். இதுவரை என்னை நடிக்கவிடாமல் தொந்தரவு செய்துகொண்டிருந்த சைத்தான்களும் சனியன்களும் இனி என்னை ஒன்றும் செய்துவிட முடியாது’என்று சவால் விடுகிறார் வைகைப்புயல் வடிவேலு. ஆனல் இதே போன்ற வெட்டிச் சவடால்களை அவர் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக விட்டுக்கொண்டிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக புதிய தமிழ்ப்படங்கள் எதிலும் நடிகர் வடிவேலு ஒப்பந்தமாகவில்லை. அதற்கான காரணம் வடிவேலுவின் காமெடி அளவுக்குப் பிரபலம் என்பதால் அதை இங்கே சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் தனக்கு எதிராக தொடர்ந்து காய் நகர்த்தி வந்த இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துடன் வடிவேலு சமாதானமாகப் போய்விட்டதாகவும் அவர் இனிமேல் படங்களில் நடிக்கத் தடை இருக்காது என்றும் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் அதை இருதரப்பும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை.

ஆனாலும் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள வடிவேலு, இம்மாத இறுதிக்குள் புதிய பட அறிவிப்பை வெளியிட்டே தீருவேன் என்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,...“மக்களை நகைச்சுவையால் சிரிக்க வைப்பதால் தினமும் நான் பிறந்து கொண்டுதான் இருக்கிறேன். எனது வளர்ச்சிக்கு காரணம் மக்கள் சக்திதான். மக்கள் சக்தி இல்லை என்றால் இந்த வடிவேலு கிடையாது. நீங்கள் ஏன் இன்னும் நடிக்காமல் இருக்கிறீர்கள் என்று என்னை பார்த்து கேள்வி எழுப்பலாம்.

விரைவில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த மாதம் முடிவதற்குள் நான் நடிக்க வருவேன். வாழ்க்கை என்றால் சைத்தான், சகுனிகள்  என்று இருக்கத்தான் செய்யும். எல்லோருடைய வாழ்க்கையிலும் அது உண்டு. அது என் வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமா? ஆங்காங்கே ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்யும். ஆனால் மக்கள் சக்தி இருக்கிறது. மறுபடியும் சொல்கிறேன். நான் மீண்டும் நடிப்பேன்’என்று அடித்துக் கூறுகிறார் வடிவேலு. இவருக்கும் இயக்குநர் ஷங்கருக்குமான பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பதால் அவர் ஷங்கரைத்தான் சைத்தான் என்று கூறுவதாக எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.