’படத்துல காமெடிக்காக வடிவேலு சார் கூட செத்துச்செத்து விளையாடின என்னை நிஜத்துல அடிக்கடி சாகடிச்சி சாகடிச்சி விளையாடுறாங்க’ என்று கண்ணீர் வடிக்கிறார் காமெடி நடிகர் முத்துக்காளை.

ஸ்டண்ட் கலைஞராக தனது சினிமா வாழ்க்கையைத் துவங்கி இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் முத்துக்காளை. அறிமுக நாயகன் ஜிஜி மற்றும் அறிமுக நாயகி கமலி நடிப்பில் நேசமானவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாங்க படம் பார்க்கலாம்’. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் முத்துக்காளை  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட  பேசியது பரபரப்பானது. 

அவ்விழாவில் பேசிய முத்துக்காளை, “ யூடியூப் சேனல்களில் நான் இறந்துபோய் 2 வாரம் ஆகிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நான் உயிரோடு தான் இருக்கிறேன். நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன். படப்பிடிப்புகளுக்கு செல்வதைவிட, இதுபற்றி விசாரித்து தினசரி வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நான் உயிரோடு இருக்கிறேன் என பதில் சொல்வது தான் பெரிய வேலையாக இருக்கிறது” என வேதனையுடன் குறிப்பிட்டார். 

யூ டுப் சேனல்களில் பிரபலமான ஒருவர் விபத்தில் தவறி விட்டதாக  இறப்புச் செய்தி பரப்பி பரபரப்பு ஏற்படுத்திவிட்டு, பின்னர் அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்ற மறுப்புச் செய்தியையும் போட்டு பொழப்பு நடத்தி வரும் கும்பல்களும் இருக்கவே செய்கின்றன.