11 வருஷத்துக்கு முந்தி பார்த்த பையன் மாதிரி அப்படியே இருக்கீங்களே...உங்களுக்கு வயசே ஆகாதா? என்று நடிகர் ஜெயம் ரவியின் ‘கோமாளி’ பட போஸ்டர் குறித்து கிண்டலாக ட்விட் பண்ணியிருக்கிறார் அவரது முன்னாள் ஹீரோயினான ஜெனிலியா டிசோஸா.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் கோமாளி. ஜெயம் ரவியின் 24-வது படமாக இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாஷி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார். தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

படத்தை பிரபலப்படுத்தும் விதமாக தினமும் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. இதுவரை 8 போஸ்டர்கள் வெளியான நிலையில் நேற்று 9-வது போஸ்டர் வெளியானது . இந்த போஸ்டரை ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பகிர்ந்து, ’ஜெயம் படத்திற்கு முன்னால் ரவியை பார்த்தது போல் இருக்கிறது’ என்று பதிவிட்டிருந்தார்.

இயக்குநர் மோகன் ராஜாவின் இந்த பதிவுக்கு  2008ம் ஆண்டில் வெளியான ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த  நடிகை ஜெனிலியா கமெண்ட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘ உனக்கு வயசே ஆகாதா. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இளைஞன் போல நான் சந்தோஷ் சுப்ரமணியத்தில் பார்த்த அதே இளமையுடன் தோற்றமளிக்கிறீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார். ஜெயம் ரவிக்கு தற்போது 39 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.