தாம் நடித்துள்ள திரைப்படங்களின் எண்ணிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி கூறியிருக்கும் எண்ணிக்கை தவறு என்றும், தாம், 12 படங்களில் நடித்திருப்பதாகவும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்காக திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் முக்கிய தலைவர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

அதன்படி, வேலூரின் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் புதிய நீதிக் கட்சியின் தலைவரும், அதிமுக வேட்பாளருமான ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசுகையில், திமுக ஒரு குடும்ப அரசியல் செய்யும் கட்சி என விமர்சித்தார்.

திமுக கட்சியில் பதவியை பெறுவதற்காக உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நடித்தார். திரைப்படங்களில் நடிக்காவிட்டால் அவரை யாருக்கு தெரிந்திருக்கும்..? அவர் நான்கைந்து படங்களில் நடித்ததால் தான் அவரை எல்லோருக்கும் தெரிந்தது. ஸ்டாலின் திமுக தலைவர் அல்ல. அவர் ஒரு கட்டப்பஞ்சாயத்து தலைவர் என கடுமையாக விமர்சித்து பேசினார். 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின் தாம் நடித்துள்ள திரைப்படங்களின் எண்ணிக்கை குறித்து முதலமைச்சர் கூறியிருக்கும் எண்ணிக்கை தவறு என்றும், தாம், 12 படங்களில் நடித்திருப்பதாகவும் கூறினார். மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மண்டபம் சீல் வைக்கப்பட்டதற்கு ஆளுங்கட்சியின் தோல்வி பயமே காரணம் என்றார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும் எனவும் உதயநிதி கூறியுள்ளார்.