தமிழில் 'மரகதநாணயம்' படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த ஆதி, கடைசியாக 'யு டேர்ன்' படத்தில் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் திரையுலகுக்கு திரும்பியிருக்கும் ஆதி, அறிமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிவரும் இந்தப் படத்திற்கு 'கிளாப்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தடகள விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்திற்கு 'இசைஞானி' இளையராஜா இசையமைக்கிறார். 

நாசர், பிரகாஷ்ராஜ், முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜீவி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளர் பிரவீன்குமார், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

வித்தியாசமான கதைக் களத்துடன் மிகவேகமாக தயாராகிவரும் 'கிளாப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இன்று வெளியிட்டுள்ளார்.  

ஏற்கெனவே ஜெய் நடிப்பில் கோபி நயினார் இயக்கிவரும் கருப்பர் நகரம் படம், கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது. வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா என விளையாட்டை மையப்படுத்திய படங்களை இயக்கியுள்ள சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன்ஸ் படம் வெளியாக தயாராக உள்ளது.

இதுபோக அருண் விஜய், ரித்திகா சிங் பாக்ஸராக நடிக்கும் பாக்ஸர், கதிர் ஃபுட்பால் வீரராக நடிக்கும் ஜடா என வரிசையாக விளையாட்டை மையப்படுத்தி படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டிவரும் நிலையில், ஆதியின் 'கிளாப்' திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.