திரையுலகினுள் கமல்ஹாசன் கால் வைத்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டதை நியாயப்படி தென்னிந்திய நடிகர் சங்கம் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் இதுவரையில் மூச்சு இல்லை. இத்தனைக்கும் அதன் தலைவராக, கமலின் சிஷ்ய கோடி நாசர்தான் இருக்கிறார். ஆனாலும் விழாவுக்கான எந்த அறிவுப்பும் வருவதாக தெரியவில்லை. 

தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியா முழுமையும் அறிய வைத்தவர், இந்திய சினிமாவின் பெருமையை உலகம் முழுக்க புரிய வைத்தவர் கமல். அதனால்தான் கலைஞானி! உலக நாயகன்! என்று அவரைக் கொண்டடுகின்றனர். அப்பேர்ப்பட்ட கமலுக்கு தமிழ் திரையுலகின் சக நடிகர்கள் விழா எடுத்துக் கொண்டாடாதது மிகப்பெரிய அவலம்தான். இது பற்றி வெடித்துப் பேசியிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளரான கவிஞர் சிநேகன்....”அறுபது ஆண்டு காலம் சினிமாவில் பயணித்திருக்கும் கமல் சாருக்கு திரை உலகம் விழா எடுக்காததில் எனக்கு நிறைய வருத்தம் உள்ளது. உலகம் அறிந்த  கலைஞன் அவர்.

எந்த நாட்டு சினிமா துறையும் இவரை அறியும். இப்பேர்ப்பட்ட மனிதர் தமிழ் திரையுலகின் மகனாய் இருப்பது பெரும் பெருமிதம். எனவே அக்கலைஞனை வாழும் போதே அங்கீகரிக்க வேண்டியது திரையுலகத்தை சேர்ந்த அனைவரின் பொறுப்பு. ஒரு வேளை தாமதமாக விழா எடுத்தாலும் எடுக்கலாம். ஆனால் ஒன்று கமல் சார் மீது திரைக்கலைஞர்களுக்கு முழு மரியாதை இருக்கிறது. ஆனால் அதிகார வர்க்கம் மிரட்டுமோ என்ற பயம் அவர்களுக்கு இருப்பதால் கமலை பாராட்டி விழா எடுப்பதை தவிர்த்திருப்பார்கள்.” என்று ஆளுங்கட்சிக்கும், கமலுக்கும் ஆகாததை வைத்து, மிரட்டும் அ.தி.மு.க.! என்று சீறியிருக்கிறார்.