பிரபல சீரியல் நடிகை சித்ரா திருமணமான இரண்டு மாதத்திலேயே தற்கொலை முடிவை எடுத்துள்ளதால், அதற்கான காரணம் குறித்தும், தற்கொலைக்கான பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் போலீசார் கடந்த நான்கு நாட்களாக விசாரணை நடத்தி வந்த நிலையி. இன்று ஆர்.டி.ஓ விசாரணையை துவங்கியுள்ளது.

டிசம்பர் 9 ஆம் தேதி ஷூட்டிங் முடிந்து, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கணவர் ஹேமந்த்துடன் தங்கிய போது, குளிக்க செல்வதாக அவரை வெளியே அனுப்பி விட்டு பட்டு புடவையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக அவரது கன்னத்தில் இருந்த நகக்கீறல் மற்றும், தாவங்கட்டையில் ரத்த காயம் இருந்ததால் இது உண்மையிலேயே தற்கொலை தானா? அல்லது கொலையா என்கிற சந்தேகம் இருந்தது . ஆனால் பிரேத பரிசோதனையின் முதல் கட்ட தகவலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தார் என்பதும், கன்னத்தில் இருந்தது அவரது நகக்கீறல் என்பதையும் போலீசார் தெரிவித்தனர்.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது, அவரது கணவர் மட்டுமே உடன் இருந்ததால், போலீசார் தொடர்ந்து நான்கு நாட்கள் அவரிடம் கிடுக்குபிடி விசாரணையை நடத்தினர், இதில் சித்ராவிற்கு மன அழுத்தம் தரும் வகையில் ஹேமந்த் மற்றும் சித்ராவின் தாய் நடந்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும் சித்ரா திருமணம் ஆகி 7 வருடங்களுக்குள் இறந்ததால், ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் ஆர்.டி.ஓ தன்னுடைய விசாரணையை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்று காலை, சித்ராவின் பெற்றோர், சகோதரர், சகோதரி, உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.