பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக புகழின் உச்சம் தொட்ட விஜே சித்ரா, நேற்று அதிகாலை நசரத்பேட்டையில் தான் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழிலதிபர் ஹேமந்த் ரவியுடன் சித்ராவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணமும் செய்து கொண்டனர். எனவே ஷூட்டிங் முடிந்து இரண்டு மணியளவில் ஹோட்டலுக்கு வந்த சித்ரா கணவர் ஹேமந்துடன் தான் அறையெடுத்து தங்கியுள்ளார். 

பின்னர் கணவரிடம் தான் குளிக்க போவதாக அவரை வெளியே அனுப்பிவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் ஹேமந்த்திடம் விசாரணை செய்த போது, சித்ரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறினார். மேலும் சற்று முன்னர் வெளியான பிரேத பரிசோதனையின் முதல் கட்ட விசாரணையிலும், சித்ரா தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டதாகவும், அவரது கன்னத்தில் இருந்த நகக்கீறல் சித்ராவுடையது என்பது உறுதியாகியுள்ளதாக கூறப்பட்டது.

உடற்கூராய்வுக்கு பின்னர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து சித்ராவின் உடல், கோட்டூர் புறத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரபலங்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கூட்டம் கூட்டமாக வந்து பலர் சித்ராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அனைவரும் அஞ்சலி செலுத்திய பின்னர், சற்று முன்னர் சித்ராவின் இறுதி ஊர்வலம் துவங்கியது. பெசன்ட் நகர் இடுகாட்டில் தகனம் செய்யப்பட உள்ள இவரது உடலை பின் தொடர்ந்து, பல சின்னத்திரை பிரபலங்கள், உறவினர்கள், ரசிகர்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள் கண்ணீரோடு செல்வது பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே கலங்க செய்துள்ளது.