சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் எஸ்.என்.சக்திவேல். இவர் இன்று காலமானார்.
Serial Director SN Sakthivel Death : இயக்குனரும் நடிகருமான எஸ்.என்.சதிவேலின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. வட சென்னையை சேர்ந்த இவர், வசனங்கள் படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். கோல்மால் உள்பட சில படங்களுக்கு வசனம் எழுதிய இவர், இவனுக்கு தண்ணீல கண்டம் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சினிமாவில் நடிகராகவும் சில படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக நாடோடிகள் படத்தில் நடிகர் சசிகுமாரின் நண்பனாக நடித்திருந்தது இவர்தான்.
யார் இந்த எஸ்.என்.சக்திவேல்?
இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்கிற நகைச்சுவை தொடரை இயக்கி அதன் மூலம் பேமஸ் ஆனார். இந்த சீரியல் இரண்டு சீசன்களாக ஒளிபரப்பானது. இவர் கடைசியாக டிடி தமிழில் பட்ஜெட் குடும்பம் என்கிற சீரியலை இயக்கினார். இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தன்னுடைய அடுத்த சீரியலுக்கான வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார் இயக்குனர் எஸ்.என்.சக்திவேல்.
கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சக்திவேல், அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கட்ட அவர், சிகிச்சை முடிந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வீடு திரும்பினாராம். இன்று காலை அவரது உடல்நிலை மீண்டும் மோசமாகி இருக்கிறது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவரது உயிர் பிரிந்திருக்கிறது.
இயக்குனர் எஸ்.என்.சதிவேலின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு இந்திரா என்கிற மனைவியும், வர்ஷினி, துர்கா என இரு மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவருமே திருமணம் ஆகாதவர்கள். சென்னை பாடியில் உள்ள அவரது இல்லத்தில் இயக்குனர் எஸ்.என்.சக்திவேலின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை அவரின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாம்.
