கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி  சின்மயி ‘மீ டூ’ வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து சமூக விஷயங்கள் குறித்து வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்.

இதனால் அவருக்கு எதிராக விமர்சனங்கள் வருகின்றன. அவற்றை சின்மயி பொருட்படுத்தாமல் உடனுக்குடன் பதிலடியும் கொடுக்கிறார். ஏற்கனவே அவர் அணிந்த ஆடைக்கு சர்ச்சைகள் கிளம்பின. அதற்கு விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் டுவிட்டரில் ஒருவர், “நீங்கள் பொது இடங்களில் சேலை அணிந்து செல்லுங்கள்” என்று கூறினார். இதற்கு பதில் அளித்த சின்மயி, “நான் சேலை அணிந்து வந்தால் சில ஆண்கள் எனது இடுப்பு உள்ளிட்ட பகுதியை போட்டோ எடுத்து அதில் வட்டமிட்டு ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர்.

அந்த படத்தை பார்த்து மோசமான தகவலையும் அனுப்புகிறார்கள். வேண்டுமென்றால் உங்களுக்கு அந்த ‘ஸ்கிரீன் ஷாட்’டை அனுப்புகிறேன். நான் சேலை அணிந்தாலும், ஜீன்ஸ் அணிந்தாலும் இந்தியன்தான்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்துள்ள சின்மயி , மீ டூ விவகாரத்தில் மாற்றம் வரவேண்டும். அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை அமைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பலர் வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை இல்லை. டப்பிங் யூனியனில் இருந்து என்னை நீக்கினர். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.