மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் (75) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (மே 29) காலமானார். சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மூச்சுத் திணறல் மற்றும் பிற பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு செய்தியை அறிந்த முதல்வர் ஸ்டாலின் ராமாபுரத்தில் உள்ள ராஜேஷின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார். முதல்வருடன் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் கே.என் நேரு மற்றும் பிற அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக நடிகர் ராஜேஷ் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “தமிழ் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என கூறியிருந்தார்.
