’ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்துக்கு அடுத்தபடியாக 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சேரன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘திருமணம்’ சில திருத்தங்களுடன். இவ்வளவு பெரிய ரெஸ்டில், தமிழ்சினிமா குதிரைப்பாய்ச்சல் நடத்தியிருக்கும் சூழலில், சேரன் என்னதான் செய்துகொண்டிருந்தார் என்ற ஆச்சர்யம் தான் படம் முழுக்க எழுகிறது. 

வானொலி ஒன்றில் ஆர்.ஜே.வாக வேலைபார்க்கும் சுகன்யாவின் தம்பி உமாபதி தம்பி ராமையாவும், சேரனின் தங்கை காவ்யாவும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளாத, வரம்பு மீறாத டீஸண்ட் காதலர்கள். இரு வீட்டாரும் இவர்களது திருமணப் பேச்சைத் துவங்க சேரனுக்கும் சுகன்யாவுக்கும் இடையே சின்னச் சின்ன ஈகோ மோதல்கள் வெடிக்கின்றன. சுகன்யா தடபுடலாக  திருமணம் நடத்த நினைக்க, சேரன் அதை வீண் ஆடம்பரம் என்கிறார். வழக்கம்போல் இடைவேளையில் திருமணத்தை நிறுத்திவிட்டு, அப்புறம் என்ன ஆகிறது என்று போகிறது திரைக்கதை.

ஏற்கனவே ட்ரெயிலரும் பாடல் காட்சிகளும் பார்த்ததாலோ என்னவோ முதல் காட்சி பார்க்கத்துவங்கும்போதே கிளைமாக்ஸ் இடம்பெறும் 57வது காட்சி வரை சுலபமாக யூகிக்க முடிகிறது. எளிமையான கதை. எல்லோருக்குமே தேவையான கருத்துகள்தான். ஆனால் அதைப் பார்த்து ரசிக்கும்படி சுவாரஸ்யமாகத் தருவதில்தான் கோட்டை விட்டிருக்கிறார் சேரன். கரு. பழனியப்பன் இயக்கத்தில் இதே சேரன் நடித்த ‘பிரிவோம் சந்திப்போம்’ படமும் ஏனோ அவ்வப்போது ஞாபகத்துக்கு வந்து போகிறது.

நடிகராகவும் இயக்குநராகவும் இப்படத்தில் சேரன் சுமார் 20 ஆண்டுகள் பின்னோக்கி இருக்கிறார் என்கிற கசப்பான உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது. காட்சிகளை நகர்துவதில் குறிப்பாக பாடல்காட்சிகளை வைத்திருக்கும் விதத்தில் அநியாயத்துக்குப் பொறுமையை சோதிக்கிறார்.திருமணத்தில் சில திருத்தங்கள் செய்ய வந்தவர் தங்கைக்கு 35 லட்சத்து வரதட்சனை தருவது என்ன கருத்தில் இடம் பெறுகிறது என்பது பிடிபடவில்லை. 

சேரன் என்னத்துக்காக திருமணம் செய்துகொள்ளாமலே இருக்கிறார்?. பத்துப்பைசா பெறாத ஒரு பிரச்சினைக்காக கணவனை 15 ஆண்டுகளாகப் பிரிந்துவாழும் சுகன்யாவுக்கு ஏன் இவர் ஒரு மறுவாழ்வு கொடுத்திருக்கக்கூடாது என்பது போன்ற நிறைய கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை.

நாயகன் உமாபதி, நாயகி காவ்யா இருவருமே ஜஸ்ட் பாஸ் மார்க் பெற்றுவிடுகிறார்கள், இவர்கள் இருவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுபவர்கள் எம்.எஸ்.பாஸ்கர்,தம்பி ராமையா,சுகன்யா ஆகியோர். அதிலும் குறிப்பாக சேரன், சுகன்யாவின் ஃப்ளாஷ்பேக்கை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும் காட்சிகளில், அடுத்த வருஷத்துக்கான இரண்டு கலைமாமணி பார்சேல்.

இசை செம சொதப்பல் என்றால் பாடல்கள் இன்னும் மோசம்.விபினுக்குப் பதில் பேசாமல் சேரனே இசையமைத்திருக்கலாம். படத்தின் ஒரே ஆறுதல் அம்சம் அழுத்தமான ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு. நாயகனும் நாயகியும் செல்போனில் மெஸேஜ் செய்யும் காட்சிகள் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் அதற்கு ஒவ்வொரு முறையும் வித்தியாசமான ஃப்ரேம்கள் வைத்து காப்பாற்றியிருக்கிறார்.

சமூகத்திற்கு ஏதாவது ஒரு நல்ல கருத்தைச் சொல்வதே என் கடமை என்னும் சேரனின் பிடிவாதம் பாராட்டப்படவேண்டியதுதான். ஆனால் இன்று எல்லாத்துறைகளிலும் நல்லவர்களை விட வல்லவர்களே தாக்குப்பிடிக்க முடியும் என்பதுதானே நிதர்சனம்.