தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல படங்களை எப்போது வேண்டுமானாலும் கைவிட்டிருக்கிறார்கள். ஆனால் கெட்ட படங்களை எப்போதுமே கைவிட்டதில்லை என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. அதற்கு சமீபத்திய சாட்சிகள் ‘ஹரஹர மகாதேவகி’,’இருட்டு அறையில் முரட்டுக் குத்து’,’இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’.’டு லெட்’ போன்ற தரமான படங்கள் மிகக் குறைவான தியேட்டர்கள் கூட கிடைக்காமல் திணறிக்கொண்டிருக்க இந்த டாய்லெட் படங்கள் வசூலை அள்ளின.

படத்தில் பாதிக்கும் மேற்பட்ட காட்சிகளில் சரக்கடிப்பது, ஆபாசக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் போன்ற அம்சங்கள் நிரம்பிய இப்படங்களின் வரிசையில், மேற்படி படங்களின் செய்கைகளைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இன்னும் சிறப்பான சம்பவங்களுடன் தயாராகியிருக்கும் ஓவியாவின் ‘90 எம்.எல்’ படம் வரும் மார்ச் 1ம் தேதியன்று ரிலீஸாகவிருக்கிறது. விஸ்வாசத்தில் தல அஜீத் எதிரிகளை அடிச்சித்தூக்கியது போல் ஓவியா இந்தப் படத்தை எல்லா சீன்களிலும் குடிச்சே தூக்கியிருக்கிறாராம்.

இதே தேதியில் அருண் விஜய் நடித்த 'தடம்’,சேரன் இயக்கியுள்ள ’திருமணம்’, சாரு ஹாசன் நடித்துள்ள ’தாதா87’, ’விளம்பரம்’, ’மானசி’, ’பிரிவதில்லை’, ’அடடே’ என 8 தமிழ்ப் படங்கள்  வெளிவரவுள்ளன.

இந்த எட்டுப் படங்களில் போட்டியில் இருப்பது சேரனின் திருமணமும், ஓவியாவின் 90 எம்.எல்.லும்தான் என்று சொல்லும்போதே யாரை யாரோடு ஒப்பிடுவது என்று  பகீர் என்கிறதா? இன்னொரு உண்மை தெரிந்தால் இன்னும் சுடும். ஓவியாவின் படத்தை வெளியிட ஆர்வம் காட்டுகிற தியேட்டர்களில் கால்வாசி கூட சேரன் படத்தை வெளியிடுவதற்கு காட்டவில்லையாம். ‘என்ன கொடுமை சரவணா?’...