குடும்ப உறவுக் கதைகளில் கண்ணீர் வடித்து செண்டிமெண்ட் காட்டி வந்த சேரன், இனி ஆக்‌ஷன் கதைகளில் இறங்கிக் கலக்க முடிவெடுத்திருக்கிறாராம். இதன் முதல் சாட்சியாக அவர் படம் முழுக்க  தம் அடித்து துப்பாக்கி தூக்கும் ஆக்‌ஷன் படமாக ‘ராஜாவுக்கு செக்’ உருவாகியுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இவர்,  ஏற்கனவே  ’ஜெயம்’  ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கியவர். வழக்கமாக சேரன் நடிக்கும் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஒரு அபிப்பிராயம் இருக்கும். ஆனால் அதை முற்றிலும் உடைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது ‘ராஜாவுக்கு செக்.’ இதை மெய்ப்பிப்பது போல ஒரு நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பிரதி திரையுலகின் முக்கியமான சிலருக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது.. இது சேரன் படம், குடும்பக் கதையாக இருக்கும் என்கிற நினைப்பில் படம் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு செம ஷாக். காரணம் படம் ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ பாணியில் இருந்ததுதான். சேரனோ நான்ஸ்டாப்பாக  சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி வேற லெவெலில் நடித்துள்ளதும், கதை செம விறுவிறுப்பாக நகர்ந்ததும்தானாம். 

குறிப்பாக காட்சிகளில் எப்போதுமே ஒரு எமோஷனும், த்ரில்லும் இருந்து கொண்டே இருந்ததாம்.  மிரட்டலான அதே சமயம் உணர்வுப்பூர்வமான இப்படிப்பட்ட  திரில்லர் படத்தை பார்த்ததே இல்லை என்று பார்த்தவர்கள் மிரண்டு போக… இந்த தகவல் விநியோகஸ்தர்கள் வட்டாரங்களில் கசிந்ததுமே, படத்திற்கான வியாபாரமே இப்போது வேறுவிதமாக மாறிவிட்டது என்கிறார்கள்.

நல்ல எமோஷனல் படத்திற்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கும், நல்ல திரில்லர் படத்திற்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கும் சரியான வேட்டை ‘ராஜாவுக்கு செக்’ என்கிறார்கள் படம் பார்த்தவர்கள். எல்லாம் சரி சேரன் தம் அடிக்கிற படத்தை டாக்டர் அன்புமணி, ராம்தாஸ்களுக்கு எப்ப போட்டுக்காட்டப்போறீங்க பாஸ்?