Leo Breaking: 'லியோ' அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு! 4 மணி காட்சிக்கு அனுமதி மறுப்பு!
லியோ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி வேண்டும் என தயாரிப்பாளர் லலித் குமார் தொடர்ந்த வழக்கின், தீர்ப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் இரண்டாவது முறையாக நடித்துள்ள 'லியோ' திரைப்படம், வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆக உள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஒரு பக்கம் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் 4 மணி காட்சி மற்றும் 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி, செவென் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி அனிதா சுமந்த் இவ் வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தார். மேலும் முதல் வழக்காக இந்த வழக்கு இன்று காலை 10:30 மணிக்கு விசாரணைக்கு வரும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், "4 மணி காட்சிக்கு அனுமதி மறுத்ததோடு, லியோ படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதிப்பது குறித்து அரசு தன்னுடைய முடிவை மறுஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி முதல் அனுமதிக்க கோரி விண்ணப்பிக்க பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுமதி அளிப்பதாகவும், தயாரிப்பு நிறுவன கோரிக்கையை பரிசீலித்து நாளை மதியத்துக்குள் உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.