சென்னையில் இன்னும் பத்து நாட்களில் துவங்கவுள்ள சர்வதேச திரைப்பட விழாவின் தமிழ்ப்படப் பிரிவில் சுமார் பத்து குப்பைப்படங்கள் வரை திரையிடப்படுகின்றன. இவை என்ன அடிப்படையில் சர்வதேச அங்கீகாரம் பெற்றன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

16ஆவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், காசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷ்யன் அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

இவ்விழாவில் 59 நாடுகளில் இருந்து 159 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. முதல் திரைப்படமாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி'ஆர் விருது வென்ற, ஷாப் லிப்டர்ஸ் (ஜப்பான்) திரைப்படம் திரையிடப்படுகிறது.

இதுவரை ஓ.கே. ஆனால் பஞ்சாயத்தே தமிழ்த் திரைப்படப்பிரிவில்தான் ஆரம்பிக்கிறது. தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் 20 படங்கள் விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1. 96  2. அபியும் அனுவும் 3. அண்ணனுக்கு ஜே 4. ஜீனியஸ் 5. இரவுக்கு ஆயிரம் கண்கள் 6. இரும்பு திரை 7. கடைக்குட்டி சிங்கம். 8. மெர்குரி 9. பரியேறும் பெருமாள் 10. ராட்சசன் 11. வடசென்னை 12. வேலைக்காரன். மேலும் இப்படங்களுடன் சிறப்புத் திரையிடல் என்ற கேடகிரியில் ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

இவற்றில்’ மேற்குத் தொடர்ச்சி மலை’ சந்தேகத்திற்கு இடமின்றி உலகத்தரம் வாய்ந்த படம் தான். மற்ற படங்களில் ‘பரியேறும் பெருமாள்’, வடசென்னை’ போனாப்போகுது ‘ராட்சசன்’ தவிர்த்து உள்ள படங்கள் என்ன எழவுக்கு திரையிடப்படுகின்றன என்பதை விழாகுழு தெரிவித்தால் அவர்களுக்கு புண்ணியமாய்ப்போகும்.