ஒரு சிறப்பான படம் கொடுத்துவிட்டு ஆறு ஆண்டுகளாக அடுத்த படம் கிடைக்காமல் தவித்துவந்த ஒரு இயக்குநரும், அறிமுகமாகி 10 ஆண்டுகளாகியும் சொல்லிக்கொள்ளும்படி ஒரு ஹிட் கூட கொடுக்காத ஹீரோவும் கைகோர்த்திருக்கிறார்கள். இயக்குநர் விக்ரம் சுகுமாறன். நடிகர் சாந்தனு பாக்யராஜ்.

’மதயானைக் கூட்டம்’ படம் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். கதிர், ஓவியா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான  இப்படத்தை இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்  தயாரித்திருந்தார். விமர்சகர்களின் சிறப்பான பாராட்டைப்பெற்ற அப்படம் வசூலில் கோட்டைவிட்டது. எனவே அடுத்த படம் கிடைக்காமல் ‘கதை பண்ணிக்கிட்டிருக்கேன்’ என்று கதை விட்டே காலம் கடத்தி வந்தார் இயக்குநர்.

தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாறன் ஆறு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்று வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக சாந்தனு நடிக்கவுள்ளார். கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்க உள்ளார்.

கதைக்காக ஒரிஜினல் ராமநாதபுரத்தானாக மாறுவதற்காக, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்தக் கதையை கேட்டதிலிருந்து பேண்ட் அணிவதை நிறுத்திவிட்டு வேஷ்டி சட்டையிலேயே சாந்தனு நடமாடுவதாகவும்[அப்புறம் ஏன் பாஸ் பூஜைக்கு மட்டும் போட்டீங்க] தனது பேச்சையும் முழுக்க முழுக்க ராமநாதபுர வட்டார வழக்குக்கு மாற்றிக்கொண்டு விட்டதாகவும் இயக்குநர் விக்ரம் சுகுமாறன் தெரிவித்துள்ளார். ஹிட்டுன்னா என்னன்னு அவர் கண்ணுல நீங்களாவது காட்டிருங்க பாஸ்.