நடிகை சித்ராவின் திடீர் தற்கொலை விவகாரம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வரும் போலீசார், அவர் தற்கொலை  செய்து கொண்ட அன்று, எங்கெல்லாம் சென்றாரோ அந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளம் சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை விவகாரம் குறித்து, நேற்றைய தினம் போரூர் கோட்டாட்சியர் லாவண்யா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்து விசாரணையை துவங்கினார். சித்ரா உடலில் உள்ள காயங்கள் பற்றிய குறிப்புகளை எடுத்து கொண்ட பின்னர், பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே சித்ரா தற்கொலை பற்றிய மர்மம் பற்றிய உண்மை தெரிய வரும் என செய்தியாளர்களிடம் கூறினார். 

மேலும் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து, சித்ரா தற்கொலைக்கு செய்து கொண்ட அன்று, யாரையெல்லாம் சந்தித்தார், அவர் ஷூட்டிங்கிற்காக சென்ற இடங்களிலும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து அதன் அடிப்படையில் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.

சித்ராவின் போனை கைப்பற்றியுள்ள போலீசார், அதில் யாரிடம் அதிகம் பேசியுள்ளார், எந்த மனநிலையில் பேசினார் என்பது குறித்த தகவல்களையும் சேகரித்து தங்களுடைய விசாரணையை தீவிர படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மர்மம் நீடிக்கும் சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் ஏதேனும் திருப்பம் ஏற்படுமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.