விஜய் சேதுபதி நடிகர் என்பதையும் தாண்டி சமூக பொறுப்புள்ள ஒரு மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. மிகவும் கஷ்டப்பட்டு தனது வாழ்க்கையில் முன்னேறிய அவர், தற்போது தமிழ் திரை உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளார்.

தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை ஏழை-எளிய மாணவர்களின் கல்வி கட்டணம், அரசு பள்ளிக் கூடங்களுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கித் தருதல் என செலவு செய்து வருகிறார்.

இந்நிலையில் மலையாள பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் விஜய் சேதுபதி, நல்ல கல்வியும், கலப்புத் திருமணமும் தான் சாதிப் பாகுபாட்டை ஒழிக்கும் என்று  தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார், அங்கு தேசாபிமானி பத்திரிகைக்கு  அவர் பேட்டியளித்தார். அப்போது பல பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து பேசினார்.

சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் கல்வியில் முன்னேற்றமும், காதல் திருமணம் செய்வதும்தான் சிறந்த வழி என தெரிவித்தார்.பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் எந்தத் துறையில் இருந்தாலும்  அது தவறுதான் என்றும், அதே நேரத்தில்  பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் விஜய் சேதுபதி கூறினார்.

கேரள  மாநில முதலமைச்சர்  பினராயி விஜயனின் மிகப்பெரிய ரசிகன் நான் என்றும், . சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயனின் முடிவு சரிதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இப் பிரச்சனையில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் வருகிறது என்று தெரியவில்லை என்று கூறிய விஜய் சேதுபதி, . தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்புக்கு நிவாரண நிதியாகக் கேரள அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.